×

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தொடர் முழக்கம்: 3வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இரு இனக் குழுக்களுக்கு இடையே நீண்டு வரும் வன்முறை சம்பவத்தால், 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஒட்டுமொத்த மாநிலமே அசாதாரண சூழலில் இருக்கும் நிலையில், பெண்களை கேடயமாக பயன்படுத்தி அவர்களை நிர்வாணப்படுத்தியும், பலாத்காரம் செய்தும், எரித்துக் கொல்லும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. மணிப்பூரில் தொடரும் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடூரங்களை ஒன்றிய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறியதாக, எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போர்க்கோலம் பூண்டு வருகின்றன. இதனால் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 2 நாட்கள் இரு அவைகளின் அலுவல்கள் அனைத்தும் முடங்கின. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதேநேரம் மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வாருங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தநிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று மூன்றாவது நாளாக மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளன.

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி ரஞ்சித் ரஞ்சன், திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தனர். அதேபோல் மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பி மனோஜ் குமார் ஜா, காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி உள்ளிட்டோர் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தனர். அதேநேரம் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வலியுறுத்தி நாடாளுமன்ற நுழைவு வாயில் முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கின. எதிர்கட்சி உறுப்பினர்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

அந்த நேரத்தில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மாநிலங்களவை தலைவர் அனுமதி மறுத்ததால், எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அதனால் மாநிலங்களவை பிற்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சி எம்பிக்கள் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். அதனால் மக்களவையும் பிற்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் இரு அவைகளும் கூடின. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கோஷங்களை எழுப்பிய நிலையில், ஆளுங்கட்சி தரப்பில் அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர். தொடர்ந்து இரு அவைகளும் மாலையில் கூடியது.

அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா; மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார். மணிப்பூர் விவகாரம் குறித்து வாதம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முக்கியமான பிரச்சனையில் உண்மை என்னவென்று மக்களுக்கு தெரிய வேண்டும். என பேசினார். அமித்ஷாவின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை, மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தொடர் முழக்கம்: 3வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Parliament ,Delhi ,Houses of Parliament ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...