×

செங்குன்றத்தில் இன்று குடிநீர் வழங்க வலியுறுத்தி மக்கள் சாலைமறியல்: போலீசார் சமரசம்

புழல்: செங்குன்றம் அருகே இன்று காலை குடிநீர் வழங்க வலியுறுத்தி, பொத்தூர் நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. செங்குன்றம் அருகே பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுநாயக்கன் நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தேடி காலி குடங்களுடன் தண்ணீர் பிடித்து வருவதில் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து, இன்று காலை 8 மணியளவில் ஈஸ்வரன் அருகே பொத்தூர் நெடுஞ்சாலையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து, தடுப்புகள் வைத்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், காட்டுநாயக்கன் நகர்பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கிறோம். மேலும், தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதி அளித்தனர். இந்த உறுதியை ஏற்று மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்குமேல் பரபரப்பு நிலவியது.

The post செங்குன்றத்தில் இன்று குடிநீர் வழங்க வலியுறுத்தி மக்கள் சாலைமறியல்: போலீசார் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Red Cross ,Dirham ,Pothur highway ,Chengkunnam ,Dinakaran ,
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...