×

குண்டும் குழியுமான ஜிஎஸ்டி சாலை: செங்கல்பட்டு அருகே விபத்து அதிகரிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி முதல் மகேந்திராசிட்டி வரையுள்ள ஜிஎஸ்டி நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இச்சாலையை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சென்னை கிண்டி மேம்பாலத்தில் இருந்து பரங்கிமலை, பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், மறைமலைநகர், பரனூர் சுங்கச்சாவடி மையம் மற்றும் செங்கல்பட்டு வழியாக பல்வேறு தென்மாவட்டங்களுக்கு சென்றுவர ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இச்சாலை வழியே 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலமாக பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த ஜிஎஸ்டி நெடுஞ்சாலை வழியே செங்கல்பட்டை கடந்துதான் அனைத்து வாகனங்களும் சென்னையில் இருந்து பல்வேறு தென்மாவட்டங்களுக்கு சென்றுவர வேண்டும். இந்நிலையில், பரனூர் சுங்கச்சாவடி மையம் முதல் மகேந்திராசிட்டி வரையிலான ஜிஎஸ்டி நெடுஞ்சாலையின் இரு மார்க்கங்களிலும் உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் தள்ளாடியபடியே கடந்து செல்கின்றன. ஒருசில வாகனங்கள் குண்டும் குழியுமான சாலையில் ஏறி இறங்குவதால் அடிக்கடி பழுதாகி சாலை நடுவே நின்றுவிடுகின்றன. இதனால் அதன்பின்னே வரும் வாகனங்கள், சாலையின் நடுவே பழுதாகி நின்றிருக்கும் வாகனங்களின்மீது மோதி அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்த ஜிஎஸ்டி சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்கு எரியாததால், அங்குள்ள மேடுபள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஏறி இறங்கும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே, இந்த சாலையில் உள்ள மேடு பள்ளங்களால் ஏற்படும் விபத்து காரணமாக அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன், அந்த சாலையை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரகிள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post குண்டும் குழியுமான ஜிஎஸ்டி சாலை: செங்கல்பட்டு அருகே விபத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : GST Road ,Chengalpadu ,Chengalpattu ,GST ,Bharanur Sungachavadi ,Mahendrasiti ,Chankalpadu ,Dinakaran ,
× RELATED கூடுவாஞ்சேரியில் பயணியர்...