×

இரு உயிரிழப்புகள் எதிரொலி: வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப் பகுதியில் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை, ஆட்டுகொந்தரை ஆகிய மலைக் கிராமங்களில் கடந்த 2 மாதங்களில் ஒன்றரை வயது சிறுமி தனுஷ்கா, கூலித்தொழிலாளி சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து உயிரிழந்தனர். இந்த இரு உயிரிழப்புகளுக்கும் மலைக்கிராமத்துக்கு சரியான சாலை வசதி இல்லாததே காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையில் அமர்ந்து சிறிது நேரம் போராட்டம் நடத்தினர்.

மேலும் அல்லேரி கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும், கிராமத்திலேயே ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனிடையே, அல்லேரி மலைக்கு சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, இது தொடர்பான விவரங்கள் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையின் பரிவேஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அல்லேரி மலைப்பகுதியில் சாலை அமைக்க வனத்துறை சார்பில் அளிக்கப்படும் 3.2 ஹெக்டேர் நிலத்துக்கு மாற்றாக 6.4 ஹெக்டேர் அளவுக்கு வருவாய்த்துறை மூலம் வனத்துறைக்கு நிலம் அளவீடு செய்து தரப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கு தார் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மலை பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது. தடையில்லா சான்றிதழ் வழங்கிய பின், தார்சாலை அமைக்கும் பணி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வனப்பகுதியில் சாலை அமைக்கும் இடத்தை அளவிடும் பணிகள் தற்போது தொடங்கின.

The post இரு உயிரிழப்புகள் எதிரொலி: வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Alleri hill ,Vellore district ,Vellore ,Allerimalai ,Dinakaran ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...