×

பைக் மீது தனியார் கல்லூரி பஸ் மோதல்; கல்லூரி மாணவன், ஐடி பெண் ஊழியர் தப்பினர்: துரைப்பாக்கத்தில் விபத்து

துரைப்பாக்கம்: சென்னை துரைப்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் மகன் கார்த்திக் (19). தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர உறவினர் ரித்திகா (20), காரப்பாக்கத்தில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இன்று காலையில் ரித்திகாவை ஐடி நிறுவனத்துக்கு பைக்கில் அழைத்து சென்றார் கார்த்திக். துரைப்பாக்கம், பிள்ளையார் கோயில் தெருவில் இருந்து துரைப்பாக்கம் 200 அடி சாலையை கடக்க பைக்கில் காத்திருந்தனர். ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் சாலையை கடந்தன. அப்போது பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் சிக்னல் நோக்கி வந்த தனியார் கல்லூரி பஸ், கார்த்திக் பைக் மீது மோதியது.

கார்த்திக், பஸ்சின் அடியில் சிக்கி அலறி துடித்தார். ரித்திகா, பஸ்சின் வலது புறமாக கீழே விழுந்து கதறினார். இருவருக்கும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. பஸ்சின் முன்பகுதியில் பைக் சிக்கி நொறுங்கியது. இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஓடி வந்து இருவரையும் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பஸ் மற்றும் பைக்கை அப்புறப்படுத்தினர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ராஜிவ்காந்தி சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் துரைப்பாக்கம் 200 அடி சாலையில் மழைநீர் கால்வாய் பணி நடந்து வருகிறது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது. துரைப்பாக்கம் 200 அடி சாலை பிள்ளையார் கோயில் தெரு சந்திப்பில் தானியங்கி சிக்னல் இல்லாததாலும் போக்குவரத்து போலீசார் இல்லாததாலும் அடிக்கடி நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் நடக்கிறது. துரைப்பாக்கம் 200 அடி சாலை பிள்ளையார் கோயில் தெரு சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்து போலீசாரை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post பைக் மீது தனியார் கல்லூரி பஸ் மோதல்; கல்லூரி மாணவன், ஐடி பெண் ஊழியர் தப்பினர்: துரைப்பாக்கத்தில் விபத்து appeared first on Dinakaran.

Tags : Duraipak Durai Pakkam ,Sasikumar ,Karthik ,Kamarajar Street, Durai Pakkam, Chennai ,Tambaram ,Duraipakku ,
× RELATED சிறப்பு வாய்ந்த கார்த்திகை சோமவாரம்