×

ஆதிச்சநல்லூரில் ஒரே முதுமக்கள் தாழியில் இரண்டு மண்டையோடுகள் கண்டெடுப்பு; தொல்லியல் ஆய்வாளர்கள் வியப்பு..!!

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் ஒரே முதுமக்கள் தாழியில் இரண்டு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு முதல்கட்டமாக ஆதிச்சநல்லூர் பரமக்குடியில் அகழாய்வு பணிகள் நடந்தது. தொடர்ந்து வாழ்விட பகுதிகளை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. அகழாய்வில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பால் ஆன பொருட்கள், தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம், வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு, நீர்கோழி போன்ற உருவங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இந்த அகழாய்வு பணிகள் ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரே முதுமக்கள் தாழியில் இரண்டு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கை எழும்பு, கால் எலும்பு, முதுகு எலும்பு என ஏராளமான எலும்புகள் தாழிக்குள் இருந்துள்ளது. இரும்பால் ஆன ஒரு உளியும் இருந்துள்ளது. கணவன் – மனைவியா அல்லது தாய் – சேயா என விரைவில் தெரியவரும் என மத்திய தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புறநானூற்றுப் பாடல் செய்தி உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் முதுமக்கள் தாழி இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

The post ஆதிச்சநல்லூரில் ஒரே முதுமக்கள் தாழியில் இரண்டு மண்டையோடுகள் கண்டெடுப்பு; தொல்லியல் ஆய்வாளர்கள் வியப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Adichanallur ,Thoothukudi ,Srikundam, Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!