×

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் தங்கத்தோடு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் தங்கத்தோடு கண்டுபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தை சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை, கொத்தளம் இருந்ததற்கான கட்டுமானம் உள்ளது. மேலும் அகழிகளும் உள்ளன. இதையடுத்து தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021ல் இந்த பகுதியில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பொற்பனைக்கோட்டையை முழுமையாக அகழாய்வு செய்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் அகழாய்வு செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 20ம் தேதி முதல் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 3.11 ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் செங்கல் கட்டுமானங்கள் வெளிக்கொணரப்பட்டது. இந்த செங்கல் கட்டுமானம் 7 முதல் 19 செ.மீ ஆழத்தில் வெளிப்பட்டது. அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மெருகேற்றப்பட்ட பீங்கான் பானை ஓடுகள், கறுப்புநிற பானை ஓடுகள், கறுப்பு, சிவப்புநிற பானை ஓடுகள், கூரை ஓடுகள், துளையிடப்பட்ட பானை ஓடுகள் என பல்வேறு வகையான பானை ஓடுகளும் கிடைத்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் பொற்பனைக்கோட்டையில் ஹெச் 2 எனும் குழியில் 133 ெசமீ ஆழத்தில் ஆறு இதழ் கொண்ட தங்கத்தோடு ஒன்றும், பிஒன் எனும் குழியில் 140 ெசமீ முதல் 145 செமீ ஆழத்தில் எலும்பு முனை கருவி மற்றும் 150 செமீ முதல் 160 செமீ ஆழத்தில் வட்ட வடிவ சிவப்பு நிறமுடைய கார்னீலியன் பாசி மணி ஒன்றும் கிடைத்துள்ளது.

எலும்பு முனை கருவி நூல் நூற்பதற்காக நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்னீலியன் கற்கள் (சூது பவள மணி) வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைக்ககூடியது. சூதுபவள மணி வரலாற்று தொடக்க காலத்தில் இருந்த உள்நாட்டு வணிகத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

பொற்பனைக்கோட்டையில் இதுவரை வட்டச்சில்லுகள், கென்டி மூக்குகள், கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் விளக்கு, தக்களிகள், காசு, சூதுபவள மணி என 274 தொல்பொருட்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் தங்கத்தோடு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Polpanaikottai ,Pudukottai ,Pudukottai district ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...