×

கடவூர், தோகைமலையில் கனகாம்பரம் பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் கனகாம்பரம் பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அதிகமான மகசூழ் பெறுவதற்கு முன்னோடி விவசாயிகள் பல்வேறு தொழில் நுட்பங்களை தெரிவித்துள்ளனர்.கரூர் மாவட்டம் தோகைமலை சுற்று வட்டார பகுதிகளில் கனகாம்பரம் பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடவூர் பகுதி வெள்ளையன் உட்பட முன்னோடி விவசாயி பல்வேறு ஆலோசனைகள் தெரிவித்ததாவது:

கனகாம்பரம் சாகுபடியில் சிவப்பு, மஞ்சள், டெல்லி கனகாம்பரம் மற்றும் பச்சை கனகாம்பரம் ரகங்கள் உள்ளது. இதில் பச்சை நிற கனகாம்பரம் பூக்கள் அழகிற்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. நல்ல வடிகால் வசதி உள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும் செம்மண் உள்ள நிலங்களில் ஆவணி மாதத்தில் இருந்து தை மாதம் வரை கனகாம்பரம் சாகுபடி செய்யலாம்.

சாகுபடிக்காக தேர்வு செய்துள்ள நிலத்தை 2 அல்லது 3 முறை நன்றாக உழுது பண்படுத்தி கடைசி உழவின்போது ஏக்கருக்கு 25 டன் அளவிற்கு மக்கிய தொழு எரு இட்டு மண்ணுடன் கலந்துவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 5 கிலோ விதைகள் தேவைப்படும் நிலையில் தேவைக்கு ஏற்ப பாத்திகள் அமைத்து தகுந்த இடைவெளிகள் விட்டு விதைகளை விதைக்க வேண்டும்.
கனகாம்பரம் சாகுபடி செய்யும் நிலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும் என்பதால் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும். ஆனால், நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுவது அவசியம். செடிகள் நட்டு 3 மாதங்களுக்கு பிறகு ஏக்கருக்கு 75 கிலோ தழைசத்து, 50 கிலோ மணிசத்து, 125 கிலோ சாம்பல் சத்து கொடுக்ககூடிய உரங்களை இட வேண்டும். இதேபோல் ஒவ்வொரு 6 மாத கால இடைவெளியில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு உரங்களை இட வேண்டும்.

செடிகள் வளர்ந்தவுடன் களைகள் அதிகமாக தோன்றாது என்பதால் செடிகள் நட்டு முதல் மாதத்தில் ஒரு முறை களை எடுக்க வேண்டும். செடிகள் நட்டு ஒரு மாதங்கள் கழித்து பூக்கள் பூக்க தொடங்கிவிடும். இதில் நன்றாக மலர்ந்த மலர்களை 2 நாட்களுக்கு ஒருமுறை பறித்து வர வேண்டும். ஒரு வருடத்திற்கு கிலோ கணக்கில் பூக்கள் கிடைக்கும். டெல்லி கனகாம்பரம் பயிரிட்டால் அதிக மகசூல் கிடைக்கும். நல்ல சீசன் காலங்களில் ஒரு கிலோ கனாம்பரம் பூ ரூ.2,000 வரை விற்பனை நடைபெறும். ஆகவே, கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் கனகாம்பரம் பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இந்த தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் அதிகமான மகசூழ் பெறலாம். இவ்வாறு முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post கடவூர், தோகைமலையில் கனகாம்பரம் பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Kadavur, ,Doghaimalai ,Kadavur ,Doghaimalayas ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...