×

குருவிகுளம் ஒன்றியத்தை மிதமான வேளாண் வறட்சி மாவட்டமாக அறிவித்திடுக: வருவாய் துறை அமைச்சருக்கு துரை வைகோ கோரிக்கை

சென்னை: குருவிகுளம் ஒன்றியத்தை மிதமான வேளாண் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வருவாய் துறை அமைச்சருக்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“தென்காசி மாவட்டத்தின் பெரும் பகுதி வானம் பார்த்த பூமி ஆகும். இம்மாவட்டம் வறட்சி நிலவும் பகுதிகளாகத்தான் விளங்குகின்றன. அதனடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கணக்கெடுத்து சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், கடையநல்லூர் ஆலங்குளம் , கீழப்பாவூர் ஆகிய ஒன்றியப் பகுதிகளை வறட்சிப் பகுதியாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் மேலநீலதநல்லூர் சங்கரன்கோவில் ஒன்றியப் பகுதிகளை ஒட்டியுள்ள குருவி குளம் ஒன்றியப் பகுதி எப்போதுமே வறட்சியான பகுதிதான்.

நாட்டின் சராசரி நிலத்தடி நீர் மட்டத்தை விட நிலத்தடி நீர் மட்டம் ஆழமாக போய்விட்டதன் காரணமாக குருவிகுளம் ஒன்றியத்தில் ஆழ் துளை கிணறு தோண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குருவிகுளம் ஒன்றியமும் வறட்சியான பகுதி தான் என்பதை உணரலாம். தவிர, வருவாய் நிர்வாக ஆணையரும் குருவிகுளம் ஒன்றியத்தை மிதமான வேளாண் வறட்சி மாவட்டமாக அறிவித்திட முன்மொழிவு அனுப்பி உள்ளார்.

அதனை ஏற்றும், உண்மை நிலையை கருத்திற் கொண்டும் குருவிகுளம் ஒன்றியத்தையும் மிதமான வேளாண் வறட்சி ஒன்றியமாக அறிவித்திட வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் அலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினேன். கடிதத்தில் தெரிவித்த அரசாணை நகலையும் அமைச்சரின் பார்வைக்கு இணைத்து உள்ளேன்.எனது கருத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்த அமைச்சர் ஆவன செய்வதாக உறுதி அளித்தார்” என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

The post குருவிகுளம் ஒன்றியத்தை மிதமான வேளாண் வறட்சி மாவட்டமாக அறிவித்திடுக: வருவாய் துறை அமைச்சருக்கு துரை வைகோ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kuruvikulam Union ,Durai Vaiko ,Minister of Revenue ,Chennai ,Sparrow Union ,Turai Vaiko ,
× RELATED மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர்...