×

மழையால் பசுமையாக காட்சியளிக்கும் கேர்ன்ஹில் வனம்

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள கேர்ன்ஹில் வனப்பகுதி மழை காரணமாக பசுமையாக காட்சியளிக்கிறது. ஊட்டி அருகேயுள்ள கேர்ன்ஹில் வனப்பகுதியில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் இப்பகுதி அமைந்துள்ளது.

இங்குள்ள பொருள் விளக்க மையத்தில் வனப்பகுதியின் மாதிரி வடிவம் உள்ளது. இங்கு வரையாடுகள், சிறுத்தை, குரங்குகளின் பதப்படுத்தப்பட்ட உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்க கூடிய பழங்குடியின மக்களின் வரலாறு குறித்த புகைப்படங்கள், நவீன நீலகிரியின் உருவான வரலாறு போன்ற தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பறவைகள், வன விலங்குகளின் ஒலிகள் அடங்கிய தொகுப்பும் உள்ளது.

இங்குள்ள வனத்தில் சிறுத்தை, மான், காட்டெருமை, அணில், புலி உள்ளிட்ட வன விலங்குகளின் மாதிரி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வனத்திற்கு நடுவே சுற்றுலா பயணிகள் நடைபயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. நடைபயணமாக சென்று வனத்தின் நடுவே உள்ள காட்சி கோபுரத்தில் இருந்து இயற்கை காட்சிகளை பார்வையிடலாம். சிறப்பம்சமாக மரங்களுக்கு நடுவே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் ஏறி நடந்து சென்று பார்த்து மகிழ்வது வழக்கம். கேர்ன்ஹில் வனத்தில் உள்ள தொங்கு பாலம் மற்றும் வன விலங்குகளின் மாதிரிகளை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

வனத்துறையால் நடத்தப்படும் இரு தங்கும் விடுதிகள் உள்ளன. இதனிடையே ஊட்டியில் பெய்து வரும் மழை காரணமாக தற்போது இப்பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளது.
அவ்வபோது காட்டுமாடு, மான் உள்ளிட்ட விலங்குகளையும் காண முடிகிறது. இங்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் பசுமையான இயற்கையையும், குளு குளு காலநிலையையும் அனுபவித்து வருகின்றனர்.

The post மழையால் பசுமையாக காட்சியளிக்கும் கேர்ன்ஹில் வனம் appeared first on Dinakaran.

Tags : Cairnhill forest ,Ooty ,Cairnhill ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி...