×

முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து முறையான பதில் அளிக்க வேண்டும்

*ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

ஊட்டி : முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையான பதில் அளிக்க வேண்டும் என ஊட்டியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழக அரசு ஒவ்வொரு மாதமும், துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு சிஎம்., டேஸ்போர்ட் மூலம் அனுப்பும் கள ஆய்வு அறிக்கையை கண்காணித்து வருகிறது. எனவே துறை அலுவலர்கள் கள ஆய்வின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வருவாய்த்துறையின் மூலம் முதல்வரின் முகவரி திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சரியான பதில் அளிக்க வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை புதுப்பித்தல் மற்றும் நிலுவை இனங்களை பதிவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி மைய முதல்வர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இணைந்து மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் படித்து பயன்பெறும் வகையில் தமிழரசு மாத இதழ் வெளியிடப்பட்டு வருகிறது. எனவே செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான சந்தா இலக்கினை எட்டிடும் வகையில் அலுவலர்கள் இதன் மீது தனிகவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஷ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ், ஆர்டிஓ.க்கள் துரைசாமி, பூஷணகுமார், முகமது குதுரதுல்லா, மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா, தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அய்யாசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து முறையான பதில் அளிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது