×

பலத்த சூறாவளி காற்றுடன் தொடரும் கனமழை அவலாஞ்சியில் 144 மி.மீ கொட்டி தீர்த்தது

*மாவட்டம் முழுவதும் 780 மிமீ மழை பதிவு

ஊட்டி : ஊட்டியில் நேற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 144 மி.மீ., கூடலூரில் 76 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 780 மி.மீ., மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இம்மாத துவக்கத்தில் சுமார் 5 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்தது. அதன் பின் மழை சற்று குறைந்து காணப்பட்டது. மாறாக மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்தது.

இந்த சூழலில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த வாரம் செவ்வாய்கிழமை முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. பலத்த சூறாவளி காற்று வீசுவதால் பல்வேறு இடங்களிலும் மரங்கள் விழுதல், மின்துண்டிப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. சாலைகளில் விழ கூடிய மரங்களை தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றி சீரமைத்து வருகின்றனர். மின் துண்டிப்புகளை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மேரிஸ்ஹில் பகுதியில் நேற்று முன்தினம் ராட்சத மரம் விழுந்தது. இதனை தீயணைப்புத்துைறயினர் வெட்டி அகற்றும் பணியை மேற்கொண்டனர். கூடலூர் சாலையில் விழுந்த மரமும் வெட்டி அகற்றப்பட்டது. பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கு கிராமப்புற சாலைகளில் மரக்கிளைகள் விழுவது வாடிக்கையாக உள்ளது. நள்ளிரவில் பலத்த காற்று வீசிய நிலையில் நேற்று அதிகாலை முதல் ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கடும் குளிர் நிலவுவதால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

சில சுற்றுலா பயணிகள் மழையின் நனைந்த படி சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். மேலும் கடும் குளிர் நிலவுவதால் தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி அறுவடை பணிகளுக்கு செல்ல கூடிய தொழிலாளர் கடும் பாதிப்படைந்துள்ளனர். ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் 144 மி.மீ, கூடலூரில் 76 மி.மீ, என மொத்தம் 780 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மழை பொழிவு நீடித்து வரும் நிலையில் பாதிப்புகளை சமாளிக்கும் பொருட்டு அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை (காலை 8.30 மணி நிலவரப்படி மி.மீ.,யில்).,ஊட்டி 8.4, நடுவட்டம் 60, கிளன்மார்கன் 31, மசினகுடி 4, குந்தா 8, அவலாஞ்சி 144, எமரால்டு 10, அப்பர்பவானி, ஓவேலி 48, குன்னூர் 2, கூடலூர் 76, தேவாலா 42, பந்தலூர் 59, அப்பர் கூடலூர் 69 என மொத்தம் 780.80 மி.மீ., பதிவாகி உள்ளது.

The post பலத்த சூறாவளி காற்றுடன் தொடரும் கனமழை அவலாஞ்சியில் 144 மி.மீ கொட்டி தீர்த்தது appeared first on Dinakaran.

Tags : Awalanchi ,Oodi ,Awalanchi m ,Dinakaran ,
× RELATED முறைகேடுகள் ஏதும் நடக்கிறதா?...