×

பெருங்குளம் குளத்தில் மணல்மேடான பாசன மடையால் நெல், வாழை கருகும் அபாயம்

*விவசாயிகள் கவலை

ஏரல் : பெருங்குளம் குளத்தில் பாசன மடை தூர்ந்து மணல் மேடாக மாறியுள்ளதால் இதனை நம்பி பயிர் செய்துள்ள 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெல், வாழை கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து விவசாயிகள் நேற்று மடை முகப்பில் இருந்த மணல் மேடுகளை ஜேசிபி மூலம் அகற்றி தண்ணீர் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டும் மடைக்குள் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் பாசன மடை வழியாக கொண்டு மறுபக்கம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஏரல் அருகே பெருங்குளம் குளம் பரப்பளவில் மிக பெரிய குளமாகும். இக்குளத்தின் உள்ள பாசன மடைகள் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை விவசாயம் நடந்து வருகிறது. கோடைக்காலம் என்பதால் இக்குளம் தண்ணீரின்றி வறண்டு குட்டையாக மாறியுள்ளது. இதையடுத்து மீன்களை வலைவிரித்து பிடிக்கும் மீனவர்கள் இரை தேடி வரும் பறவைகளையும் வேட்டையாடுகின்றனர். இதனிடையே குளம் குட்டையாக மாறியதால் பாசன மடையில் விவசாயத்திற்கு தண்ணீர் வருவது நின்றுபோனது.

அத்துடன் பெருங்குளம் குளத்தின் 5ம் நம்பர் பாசன மடை முன்பாக மணல் திட்டு உருவானதால் குளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற முடியாதநிலை உருவானது. இதனால் இந்த பாசன மடையை நம்பி பயிர்செய்துள்ள 300 ஏக்கர் பரப்பளவிலான நெல், வாழை பயிர்கள் கருகும் நிலை உருவானது. இதையடுத்து நேற்று காலை பெருங்குளம் குளம் விவசாய சங்கத்தலைவர் சுடலை தலைமையில் பாசன மடை உறுப்பினர் ரவிச்சந்திரன் முன்னிலையில் விவசாயிகள் ஜேசிபி மூலம் இந்த பாசன மடையின் (நம்பர் 5) முன்பு ஏற்பட்டுள்ள மணல் மேடுகளை தோண்டி தற்காலிகமாக அகற்றி மடைக்குள் தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

ஆனால் மடைக்குஉள்ளேயும் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் தண்ணீர் குளத்தில் இருந்து மறுபக்கம் பாசன மடை வாய்க்காலில் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் தங்களது முயற்சியினை கைவிட்டனர். இதனால் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு தண்ணீர் கொண்டு வரமுடியாமல் போனதால் கவலை அடைந்துள்ளனர்.

நிரந்தரத்தீர்வு

பெருங்குளம் குளத்து பாசன விவசாய சங்கத் தலைவர் சுடலை கூறுகையில் ‘‘பெருங்குளம் குளத்தில் உள்ள பாசன மடை வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பெருங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை விவசாயம் நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பெருங்குளம் பாசன மடை 6ல் (மூங்கில் மடை) அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வராததால் இந்த பாசன மடை மூலம் நடைபெறும் விவசாய பகுதியில் கடந்த ஓராண்டாகியும் விவசாயம் நடைபெறாததால் தரிசு நிலமாக மாறியுள்ளது.

இந்நிலையில் தற்போது பாசன மடை 5ல் (நாளி மடை) மணல் மேடு ஏற்பட்ட தூர்ந்து போனதால் தண்ணீர் வராமல் போனது. இதையடுத்து பாசன மடை முன்பாக தேங்கியிருந்த மணல் மேடுகளை ஜேசிபி மூலம் அகற்றி குளத்தில் கிடக்கின்ற தண்ணீரை பாசன மடை வாய்க்கால் மூலம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் மடையின் உள்ளே அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மடைவரை வந்த தண்ணீர் அக்கரைக்கு வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் எங்களது முயற்சி பலன் அளிக்காமல் போனது.

இதனால் இந்த பாசன மடையை நம்பி பயிர் செய்துள்ள வயல்களில் நெல் கதிர் வரும் நிலையில் உள்ளதால் தண்ணீரின்றி கருகிவிடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளோம். எனவே பெருங்குளம் குளத்தில் தற்போது தண்ணீர் வற்றிய நிலையில் இருப்பதால் குளத்து பாசன மடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ள இந்த மடைகளை மழைக்காலம் துவங்குவதற்கு முன்னதாக போர்க்கால அடிப்படையில் சீரமைத்து இந்த பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

The post பெருங்குளம் குளத்தில் மணல்மேடான பாசன மடையால் நெல், வாழை கருகும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Perungulam pond ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...