அம்பை: கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊரை சுற்றி பொட்டல், மூலச்சி, தெற்கு பாப்பான்குளம், வைராவிகுளம், வெள்ளங்குளி, அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு போன்ற கிராமப்புறப் பகுதிகளும், மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி, கோதையாறு, குதிரைவெட்டி உள்ளிட்ட மலைப்பிரதேச பகுதிகளும் உள்ளன. இங்குள்ள ரயில் நிலையம் 125 ஆண்டு பழமையான பாரம்பரியம் கொண்டது. இவ்வழியாக செல்லும் நெல்லை-தென்காசி பயணிகள் ரயிலில் அதிகமான பயணிகள் ஏறி, இறங்கும் ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி வழியாக செல்லும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எதுவும் நிற்பதில்லை. எனவே எக்ஸ்பிரஸ் ரயில்கள் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கிபாண்டியன், டாக்டர் பத்மநாபன், செபாஸ்டியன் அந்தோனி, ஜமாத் தலைவர்கள் சாகுல்ஹமீது, நாகூர்மைதீன், அப்துல் மஜீது, ஒலிமாலிக், மசூது ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் தங்கப்பன், ராமகிருஷ்ணன், அனிபா, ராபர்ட், சிவானந்தம், அப்துல்சமது, சிவராம கிருஷ்ணன், கார்த்திக், அபூபக்கர், ஓய்வு ஆசிரியை மீனாள், ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் விஸ்வநாதன், ஜான் ஞானராஜ், சீதாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல கோரி கல்லிடைக்குறிச்சியில் பயணிகள் சங்கம் கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.