×

மின்கம்பங்கள், மின்மாற்றிகளை அகற்றாததால் சாலை விரிவாக்க பணி நிறுத்தி வைப்பு

 

ஸ்ரீபெரும்புதூர்: பிள்ளைபாக்கம் – மணிமங்கலம் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள தாழ்வாக செல்லும் மின் கம்பங்களால், கடந்த ஒரு மாதமாக மேம்பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைப்பு. எனவே,இடையூறாக உள்ள மின் கம்பங்கள் அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை, சென்னை-திருச்சி ஜி.எஸ்.டி., சாலையை இணைக்கும் சாலையாக ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலை உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கட்சிப்பட்டு, பிள்ளைப்பாக்கம், நாவலூர், கொளத்தூர், மலைப்பட்டு, சேத்துப்பட்டு, புஷ்பகிரி, மணிமங்கலம், முடிச்சூர், பெருங்களத்தூர் வழியாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை இணைக்கிறது.

மேற்கண்ட பகுதியைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் என தினமும் 1,500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். தற்போது, தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை மாநகர பேருந்து தடம் எண் 583-சி, 583-டி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் வாகன நெரிசலும், அடிக்கடி விபத்தும் நடப்பதால் இரு வழிச்சாலையான இந்த சாலையை நான்கு வழி சாலையாக அகலபடுத்த நெடுஞ்சாலை துறை சார்பில் திட்டமிடபட்டது.

இதில் முதல் கட்டமாக, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பிள்ளைபாக்கம் வரை 3.5 கிலோமீட்டர் சாலையை 4 வழி சாலையாக 3 ஆண்டுகளுக்கு முன்பு அகலபடுத்தபட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக, பிள்ளைப்பாக்கம் முதல் மணிமங்கலம் வரை 8.4 கிலோமீட்டர் நீளத்திற்கு அகலபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மணிமங்கலம் ஏரிக்கரை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் மேம்பாலம் கட்டும் பணியும், சாலை அமைக்கும் பணியும் கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக்கம் செய்யும் பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றி தர படப்பை துணை மின் நிலையத்தில் பல முறை வலியுறுத்தபட்டுள்ளது. இருப்பினும், இன்று வரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் சாலை விரிவாக்க பணிகள் கடந்த ஒரு மாதமாக கிடப்பில் போடபட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, சாலை விரிவாக்க பணிக்கு இடையுறாக உள்ள மின்கம்பம் மற்றும் தாழ்வாக செல்லும் மின் ஒயரினை அகற்றி தர வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

The post மின்கம்பங்கள், மின்மாற்றிகளை அகற்றாததால் சாலை விரிவாக்க பணி நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Pillipakkam ,Manimangalam ,
× RELATED சென்னையில் மது விற்பனை செய்தவரிடம் பணம் பறிப்பு: காவலர்களிடம் விசாரணை