×

ஜுனாகத் நகரில் 241மிமீ மழை பதிவு வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்: அகமதாபாத் விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்தது

அகமதாபாத்: குஜராத்தில் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அகமதாபாத் விமான நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்ததால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லி, அரியானா, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கனமழை நீடிக்கிறது. குஜராத் மாநிலத்திலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் வீடுகள் வௌ்ள நீரில் மிதக்கின்றன. மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு மாநிலம் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

சாலைகளில் வெள்ளம் தேங்குவதால் போக்குவரத்து முடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மாநிலத்தின் இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், 10 மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் 300 கிராமப்புற சாலைகள் மூடப்பட்டுள்ளது. ஜுனாகத் நகரில் நேற்று காலை 6 மணி வரை 241 மிமீ மழை பெய்துள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் கால்நடைகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள், எரிவாயு சிலிண்டர்கள் அடித்து செல்லப்பட்டன. இந்த மாவட்டத்தில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வௌியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ராஜ்கோட் நகரில் தேங்கி நிற்கும் மழை நீரில் வாகனங்கள், வீடுகளில் இருந்து வௌியேறிய பொருட்கள் மிதக்கின்றன.

சூரத், பாவ்நகர், ஜாம்நகர், பொட்டாட், பருச் ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை 10 மணி வரை 50 முதல் 117 மிமீ மழையும் பெய்துள்ளது. அகமதாபாத் நகரும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. விமான நிலையத்திலும் முட்டளவு தண்ணீர் தேங்கி உள்ளது. விமான ஓடுபாதைக்குள் வெள்ளம் புகுந்ததால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமான பயணிகள் வௌியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத்துறையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாவ்நகர், தேவபூமி துவாரகா, ராஜ்கோட், வால்சாத் ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.

* மகாராஷ்டிராவிலும் கனமழை

மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. அமராவதி, அகோலா, பண்டாரா, புல்தானா, சந்திராபூர், கட்சிரோலி, கோண்டியா, நாக்பூர், வர்தா, வாஷிம், யவத்மால் ஆகிய பகுதிகளில் தொடர் கனமழை நீடிக்கிறது. இதுவரை கனமழை, மின்னல் காரணமாக 16 பேர் உயிரிழந்து விட்டனர். நாக்பூர், வார்தா, பண்டாரா, கோண்டியா, சந்திராபூர், கட்சிரோலி மாவட்டங்களில் மொத்தம் 875.84 ஹெக்டேர் நிலங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளன. 1,600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை அகோலாவில் 107.9 மிமீ, யவத்மாலில் 24.0மிமீ, வார்தாவில் 23.4 மிமீ, அமராவதியில் 15.6 மிமீ, நாக்பூர் 6.7 மிமீ, கட்சிரோலியில் 3.0 மிமீ, சந்திராபூரில் 2.2 மிமீ, புர்ஹானாவில் 2 மிமீ மழையும் பாதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வௌ்ள பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளதாக துணைமுதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியுள்ளார்.

* குஜராத் முதல்வருடன் அமித் ஷா பேச்சு

குஜராத் வௌ்ள நிலவரம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்துக்கு உதவ பேரிடர் மீட்பு படையினர் தயாராக இருப்பதாக அப்போது அமித் ஷா தெரிவித்தார்.

* யமுனையில் வெள்ளப்பெருக்கு டெல்லியில் மீண்டும் ஆபத்து

இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஹத்னிகுன்ட் தடுப்பணையில் இருந்து நீர் வௌியேற்றப்பட்டதால் டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இதனிடையே யமுனை ஆற்றின் வெள்ளள நிலவரம் குறித்து டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

The post ஜுனாகத் நகரில் 241மிமீ மழை பதிவு வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்: அகமதாபாத் விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்தது appeared first on Dinakaran.

Tags : Junagadh ,Gujarat ,Ahmedabad airport ,AHMEDABAD ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் கோத்ரா மையத்தில்...