×

மாஜி மந்திரிகளை வெளுத்து வாங்கிய இலையின் இரட்டையர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மா நாட்டுக்கு கரன்சி கேட்ட மாஜிக்களுக்கு விழுந்த ‘டோஸ்’ பற்றி ெசால்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில், தனது பலத்தை நிரூபிக்கவும், தேனி தரப்பில் மிச்சம் மீதி இருப்பவர்களையும் இழுத்து வந்து இலையில் சேர்ப்பதற்காகவும், சேலத்துக்காரர் மதுரையில் அடுத்த மாதம் 20ம் தேதி எழுச்சி மாநாடு என்ற பெயரில் கூட்டம் நடத்துகிறார். அது மட்டுமல்ல தனக்கு தெற்கிலும் பவர் இருக்கிறது என்று காட்டவே இந்த மாநாடாம். இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இலை கட்சி இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. நாங்கள் நினைத்தால் எம்பி தேர்தலில் 25 முதல் 30 சீட்டு வரை வெற்றி பெறுவோம் என்று தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் தாமரையின் முக்கிய தலைவர்களின் காதுகளில் படும்படி செய்துள்ளாராம். அந்த தகவல் சரியாக ஒன்றிய அரசின் முக்கிய அமைச்சர்களின் காதுகளில் சென்று சேர்ந்துள்ளதாம். இதன் நோக்கமே, தாமரை கட்சி இனி இலை பேச்சை மட்டுமே கேட்கவேண்டும் என்று ஸ்கெட்ச் போட்டு செய்த வேலையாம். மாநாட்டு செலவுக்கு மாஜிக்கள் ‘பெரிய அளவில் கரன்சி, மிகப்பெரிய கூட்டத்தை அழைத்து வர வேண்டும் என்று அசைன்மென்ட் கொடுத்துள்ளாராம் சேலம்காரர். மற்ற மாவட்ட செயலாளர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு மாநாட்டுக்கு பங்களிப்பு நிதி அளித்தே தீர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம். மாநாட்டு செலவு மற்றும் ஏற்பாடுகளை சேலத்துக்காரரின் நேரடி பார்வையில், அவரின் நெருக்கமான இரண்டு மணிகள் தான் செய்து வர்றாங்க. அவங்க சைடுல இருந்து பெரும் கரன்சியை கொட்டி இருக்கிறார்களாம். அதனால்தான் மற்றவர்களிடமும் கரன்சியை கேட்டுள்ளாராம்.

இந்நிலையில், தூங்காநகர் மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்ட செயலாளர்கள், மாநாட்டு பந்தல் பணியை மட்டும் பார்த்தால் போதும், மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என இரண்டு மணிகளும் கறாராக சொல்லிட்டாங்களாம். நாங்கள் இந்த பணியை செய்கிறோம் என்று கூறி கரன்சியை கேட்காதீங்கனு கண்டிஷனாக சொல்லிட்டாங்க. இதனால், தூங்கா நகர மாவட்ட செயலாளர்கள் கொந்தளிப்பில் இருக்காங்களாம். மாநாட்டிற்கான செலவு தொகையை எங்களிடம் கொடுக்கவில்லை. மாநாடு எங்க ஊரில் நடத்தும்போது, ஆயிரக்கணக்கில் ஆட்களை திரட்ட வேண்டும். அவர்களை அழைத்து வர வாகன செலவு, டீ செலவு, டிபன் செலவு, உற்சாகச் செலவு என்று எக்கச்சக்கமாக இறக்கி விட வேண்டியிருக்கும். இதற்கு நாங்கள் எங்கே போவது என்று கேள்வி கேட்டாங்களாம். மறைத்து வைத்துள்ள கரன்சிகளை எடுத்து செலவு செய்யுங்க மற்றது எலக்‌ஷன் டைம்ல உங்களை தேடி வரும்னு சொன்னாங்களாம். இதை சமாளிக்கவே சரியா இருக்கும். இனி, மாநாட்டு செலவுக்கு தனியா வேற.. தலைமைக்கு பணம் எப்படித் தருவது அதெல்லாம் வாய்ப்பில்லை என்று புலம்பியபடி கிளம்பினாங்களாம். அவங்க போனா போகட்டும் இரண்டு மாஜி பெல் மந்திரிகள் பார்த்து கொள்வார்கள் என்று அமைதியாகிட்டாராம் சேலம்காரர்… சேலத்துக்காரர் எவ்வளவோ பேசி பார்த்தும், தூங்காநகர மா.செக்கள் ஏற்கவில்லை. இதனால், மாநாட்டிற்கு இவர்களின் செலவு விபரம் தனியாக கணக்கிடப்படுகிறதாம். கடைசியில் இவர்கள் செலவுத் தொகையை பார்த்து, அவர்களிடம் எப்படி வசூல் செய்ய முடியுமோ, அந்த மாதிரி வசூல் செய்துவிடலாம் என சேலத்துக்காரர் முடிவு செய்துவிட்டராம். இந்த தகவல் உச்சந்தலையில் இடி விழுந்த மாதிரி இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஜெயில் லேடி அதிகாரி போட்ட ரகசிய கூட்டத்தை பற்றி சொல்லேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி மாநகரில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் மாவட்ட ஜெயில் ஒண்ணு இருக்கு. கொரோனா காலத்துல இந்த ஜெயில், அதிகாரிகளுக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சாம். இருநூறு கைதிகள் வைக்கும் வசதிகொண்ட இங்கு தற்போது 60 கைதிகள் இருக்காங்க. இச்சிறையின் வெளிப்பக்கமும், உள்பக்கமும் கண்காணிப்பு கேமரா இல்லையாம். இதனால அங்கிருக்கும் வார்டன்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமாம். உள்ளே என்ன போகுதுன்னு கூட அவர்களை விட்டால் யாருக்குமே தெரியாதாம். கைதிகளுக்கான உணவு பொருட்களை கம்ப்யூட்டர் அறைக்கு கொண்டுபோய் லபக்கிடுவாங்களாம். இப்படித்தான் பிரபல ரவுடியின் உள்ளாடைக்குள்ளிருந்து கை பேசியை மீட்டாங்களாம். கொஞ்சூண்டு கஞ்சாவும் இருந்துச்சாம். வெளியே தெரியாமல் மூடிமறைச்சு பாத்தும், விவகாரம் வெளியே கசிஞ்சிப்போச்சாம். உடனே ரகசிய கூட்டம் ஒன்றை அங்கிருக்கும் லேடி அதிகாரி கூட்டியிருக்காரு. எப்படி இருந்தாலும் நம்ம ஜெயிலுக்கு ஆபீசர்ஸ் வருவாங்க. எல்லா பக்கமிருந்தும் நம்மிடம் துருவி துருவி கேட்பாங்க. அடிச்சு கூட கேப்பாங்க.. ஆமான்னு யாரும் வாயை திறந்திடக்கூடாது. உண்மைன்னு தெரிஞ்சுப்போச்சுன்னா நம்மை அந்த ஆண்டவனாலும் கூட காப்பாத்த முடியாதுன்னு’ சொன்னாங்களாம். அதன்படியே உயரதிகாரிகள் வந்து கேட்டும் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். ஆனா உள்ளாடைக்குள்ளிருந்து செல்லை எடுத்த வார்டனை மட்டும் அதிகாரிகள் தங்களது வலைக்குள் கொண்டாந்திருக்காங்களாம். விரைவில் ரகசிய கூட்டம் அம்பலத்துக்கு வருமுன்னு அதிகாரிகள் நம்புறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ கணக்கு போட அடிக்கடி கால்குலேட்டர் எடுக்கும் அதிகாரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்துல உள்ள கிராம ஊராட்சிகள புல்லாங்குழலை ஏந்திய கடவுளின் பெயரை கொண்ட வட்டார அலுவலர் கவனித்து வருகிறார். இவரு கையில எப்போதும் கால்குலேட்டர ஏந்தியபடியே சுத்திக்கிட்டு இருக்கிறாராம். மேலும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிச்சாலும் பில் கொடுக்காம கமிஷன் கேட்டு அலைக்கழிக்கிறாராம். யாராவது பில் கேட்டு வந்தா, வட்டார அலுவலர் கால்குலேட்டர்ல கணக்கு போட தொடங்கிடுறாராம். தனி நபர் கழிவறைக்கு தலா ரூ.500, ஜல்லி ரோடு போட 2 சதவீதம், சிமெண்ட் ரோடு போட 3 சதவீதம், வீடு வழங்கும் திட்டத்துல ஒரு பில்லுக்கு ஆயிரம் ரூபாய்ன்னு கறாராக பணம் வசூலிக்கிறாராம். இப்படி எல்லாத்துக்கும் பணம் கேட்டா எப்படின்னு உள்ளாட்சி பிரதிநிதிங்க கேள்வி கேட்டா, இது எனக்கு மட்டும் இல்ல, எல்லாருக்கும் கொடுக்க வேண்டியிருக்குதுன்னு பதில் சொல்றாராம். இவரு நடவடிக்கையால அரசுக்கு கெட்ட பெயர் வந்துடாம இருக்கனும்னு உள்ளாட்சி பிரதிநிதிங்க சிலரு விஜிலென்ஸ்சுக்கு தகவல் கொடுத்துட்டாங்களாம். இதுனால விஜிலென்ஸ் அதிகாரிங்க துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையே சுற்றி சுற்றி வர ஆரம்பிச்சு இருக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post மாஜி மந்திரிகளை வெளுத்து வாங்கிய இலையின் இரட்டையர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki Yananda ,Uncle ,Peter ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...