×

பிரபல தனியார் நிறுவனத்தில் ரூ.5 ேகாடி கையாடல் செய்த வழக்கு மோசடி பணத்தில் வெளிநாட்டு அழகிகளுக்கு பல லட்சம் வாரி இறைத்து உல்லாசம்: 2 நாள் விசாரணையில் கைதான 2 முன்னாள் ஊழியர்கள் வாக்குமூலம்

* மேலும் அரை கிலோ தங்கம், ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சென்னை: பிரபல தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி கையாடல் செய்த வழக்கில் கைதான 2 முன்னாள் ஊழியர்கள், அந்த பணத்தில் பல லட்சம் ரூபாய் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உள்ள வெளிநாட்டு அழகிகளுக்கு பல லட்சம் ரூபாய் வாரி இறைத்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து அரை கிலோ தங்கம், ரூ.10 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை தரமணியை தலைமையிடமாக கொண்டு பிலிப்ஸ் ஜிபிஎஸ் எல்ஐபி என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவன கணக்காளர்களாக பணியாற்றி வந்த பரமக்குடியை சேர்ந்த அகஸ்டின் சிரில் மற்றும் அவரது நண்பர் ராபின் கிறிஸ்டோபர் ஆகியோர், நிறுவனத்தின் பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் நாட்டில் உள்ள அலுவலக கிளையின் பெயரில் போலி கணக்கு மூலம் ரூ.5 கோடி வரை மோசடியாக எடுத்துள்ளனர். இதுகுறித்து பிலிப்ஸ் ஜிபிஎஸ் எல்ஐபி நிறுவன மேலாளர் ரமேஷ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வந்த அகஸ்டின் சிரில் மற்றும் ராபின் கிறிஸ்டோபர் ஆகியோர் பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினில் உள்ள அலுவலக கிளையின் பெயரில் அந்த நாடுகளில் உள்ள தங்களது நண்பர்களுக்கு பணத்தை அனுப்பி மோசடி செய்துள்ளனர். பிறகு நண்பர்களின் வங்கி கணக்குகளில் இருந்து இவர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி ரூ.5 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து ரூ.5 கோடி கையாடல் ெசய்த அகஸ்டின் சிரில் மற்றும் ரியாஸ் கிரிஸ்டோபர் ஆகியோரை இன்ஸ்பெக்டர் ரேவதி பரமக்குடியில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 215 சவரன் தங்க நகைகள், ரூ.7.60 லட்சம் ரொக்கம், ஒரு கார், ஒரு பைக், லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இருவரின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.65 லட்சம் பணம் முடக்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 முன்னாள் ஊழியர்களை இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து, இருவரையும் பரமக்குடிக்கு அழைத்து சென்று நேரில் விசாரணை நடத்தினர்.

அப்போது, 2 முன்னாள் ஊழியர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தினர் நாங்கள் இருவரும் ரூ.5 கோடி வரை கையாடல் செய்ததை ஆடிட்டிங் மூலம் கண்டுபிடித்துவிட்டனர். இதனால் நாங்கள் இருவரும் வேலையை விட்டு நின்றுவிட்டோம். பிறகு ஸ்பெயின் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள எங்கள் நண்பர்களின் மூலம் மோசடி பணத்தை இருவரும் சமமாக பிரித்து, வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர். மோசடி பணத்தில் அகஸ்டின் சிரில் மட்டும், தனது மனைவிக்கு 2 கிலோ 240 கிராம் தங்க நகைகள் வாங்கி கொடுத்துள்ளார். அதில் ஒரு செயின் மட்டும் 215 கிராம் கொண்டது. ராபின் கிரிஸ்டோபர் சற்று ஏழ்மையான குடும்பம் என்பதால் அவரது தந்தை வாங்கிய கடனை ரூ.10 லட்சத்துக்கு மேல் மோசடி பணத்தில் அடைத்துள்ளார். அதோடு இல்லாமல் தனது பங்கான மோசடி பணத்தில் பரமக்குடியில் ரூ.20 லட்சத்துக்கு வீடு ஒன்று கட்டியுள்ளார். மேலும், ரூ.10 லட்சத்தை தனது நண்பர் ஒருவருடன் இணைந்து தனியாக தொழில் தொடங்கியுள்ளார். மேலும், உறவினர்கள் பெயரில் நிலங்கள் வாங்கி குவித்துள்ளார். திருமணம் ஆகாத ரியாஸ் கிரிஸ்டோபர் தனது மாமா மகளை திருமணம் செய்ய அனைத்து நடவடிக்கையும் அவரின் பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். தனது வருங்கால மனைவிக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் அவரது தந்தைக்கு ரூ.1 லட்சத்தில் புதிய பைக் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார்.

அதோடு இல்லாமல், அகஸ்டின் சிரில் மற்றும் ராபின் கிரிஸ்டோபர் ஆகியோர் பெங்களூருக்கு கடந்த 3 மாதமாக அடிக்கடி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து, வெளிநாட்டு அழகிகளுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அதற்காக இருவரும் பல லட்சம் ரூபாய் பணத்தை அழித்துள்ளனர். மேலும், இருவரும் தங்களுக்கு பிடித்த அழகிகளுக்கு பணத்தை டிப்ஸ் என்ற பெயரில் வாரி இறைத்துள்ளனர். பின்னர் அகஸ்டின் சிரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் 5 சவரன் மதிப்புள்ள ஒரு தங்க காசு வீதம் 13 தங்க காசுகள் என மொத்தம் 520 கிராம் தங்கம் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரியாஸ் கிரிஸ்டோபர் மட்டும் தனது மோசடி பணத்தை திறமையாக அசையா சொத்துக்களாக வாங்கி குவித்துள்ளார். இதனால் அவரிடம் இருந்து அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

The post பிரபல தனியார் நிறுவனத்தில் ரூ.5 ேகாடி கையாடல் செய்த வழக்கு மோசடி பணத்தில் வெளிநாட்டு அழகிகளுக்கு பல லட்சம் வாரி இறைத்து உல்லாசம்: 2 நாள் விசாரணையில் கைதான 2 முன்னாள் ஊழியர்கள் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…