×

கோவையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் சடலமாக மீட்பு மனைவி வாங்கிய ரூ.25 லட்சம் கடனால் குடும்பத்தையே கொன்று கணவன் தற்கொலை: 2 ஆசிரியர்களிடம் போலீஸ் விசாரணை

தொண்டாமுத்தூர்: கோவை வடவள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மனைவி வாங்கிய ரூ.25 லட்சம் கடனால் குடும்பத்தையே கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக 2 ஆசிரியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை வடவள்ளி குறிஞ்சி வீதி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (34). பிஇ டிசைனர் இன்ஜினியர். இவரது மனைவி லக்சயா என்ற சுருதி (29). பிரெஞ்சு மொழியில் டாக்டர் பட்டம் பெற்று டியூசன் எடுத்து வந்தார். இவர்களது மகள் யக்சிதா (10). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுடன் ராஜேசின் தாய் பிரேமா (73) வசித்து வந்தார். கடந்த 20ம் தேதி காலை சுருதி குன்னூரை சேர்ந்த தனது தந்தை பாலன் (69) என்பவருடன் செல்போனில் பேசி உள்ளார். அதன்பின்னர் சுருதியின் செல்ேபான் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. பாலன் தனது மகளை கடந்த 3 நாட்களாக தொடர்பு கொண்டார். ஆனால், தொடர்ந்து சுவிட்ச் ஆப் என்றே வந்தது. நேற்று முன்தினம் காலை வீட்டின் உரிமையாளர் ஷீலா வெளியே வந்து பார்த்தபோது ராஜேசின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து சுருதியின் தந்தை பாலனுக்கு ஷீலா போன் மூலம் தகவல் தெரிவித்தார். பாலன் அங்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனையடுத்து வடவள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஷ் தூக்கிட்டும், மற்றவர்கள் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அழுகிய நிலையில் இருந்த 4 பேரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது: லக்சயாவுக்கு தனது கணவர் மூலம் அதே பகுதியில் உள்ள டாடா நகரை சேர்ந்த கணித ஆசிரியரான ஜெய்பாரத் (32) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. ஜெய்பாரத் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். ஜெய்பாரத்திடம், கணவருக்கு தெரியாமல் பல கட்டங்களாக லக்சயா ரூ.25 லட்சம் கடன் பெற்றுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் கடனை ஜெய்பாரத் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் லக்சயா முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, ஜெய்பாரத் தனது டியூசன் சென்டரில் கணித ஆசிரியராக பணியாற்றும் வள்ளலார் நகரை சேர்ந்த தீபக் (32) என்பவருடன் சேர்ந்து லக்சயாவின் கணவரை சந்தித்து லக்சயா வாங்கிய கடன் குறித்தும், அதற்கான வங்கி பரிவர்த்தனை குறித்தும் பேசினர். இதனால் கடன் வாங்கியது குறித்து கணவன்-மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு புறம் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இன்னொரு புறம் குடும்ப சண்டை. இதனால் விரக்தியடைந்த ராஜேஷ் தனது தாய், மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். இந்நிலையில், கடன் கொடுத்த ஜெய்பாரத் மற்றும் அவரது நண்பர் தீபக்கிடம் போலீசார் விசாரிக்கின்றனர்..

* கடிதம் சிக்கியது

குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட இன்ஜினியர் ராஜேஷ் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ராஜேஷ் எழுதிய கடிதம் சிக்கியது. அதை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த கடிதத்தில், ‘‘கடன் இருப்பதால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’’ என்று எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

The post கோவையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் சடலமாக மீட்பு மனைவி வாங்கிய ரூ.25 லட்சம் கடனால் குடும்பத்தையே கொன்று கணவன் தற்கொலை: 2 ஆசிரியர்களிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Thondamuthur ,Vadavalli, Coimbatore ,
× RELATED அமோக வெற்றியை தந்த தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த பெண் விவசாயி நாகரத்தினம்!