×

லாரியுடன் விவசாயியை கடத்தி சென்று 2.5 டன் தக்காளியை கொள்ளை அடித்த வேலூர் தம்பதி கைது: கர்நாடகா போலீஸ் அதிரடி; மேலும் 3 பேருக்கு வலை

சித்ரதுர்கா: லாரியுடன் விவசாயியை கடத்தி சென்று 2.5 டன் தக்காளியை கொள்ளை அடித்த வேலூர் தம்பதியை கர்நாடகா போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். கர்நாடகாவில் விபத்தில் விவசாயி பலியானதால், அவரது தக்காளியை கொள்ளையடித்த சம்பவத்தில் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் கோலார் மார்க்கெட்டில் இருந்து சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் நகருக்கு லாரியில் தக்காளியை ஏற்றிக் கொண்டு விவசாயி மல்லேஷ் என்பவர் சென்றார். அப்போது தமிழகத்தின் வேலூரை சேர்ந்த தம்பதி பாஸ்கர் (28) – சிந்துஜா (26) ஆகியோர் காரில் சென்றனர். ரிங்ரோடு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, தங்களது காரின் மீது லாரி மோதியதாக கூறி தக்காளி லோடு லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரியில் இருந்த விவசாயி மல்லேஷிடம், விபத்துக்கான இழப்பீடு கேட்டு வாக்குவாதம் செய்தனர். அவர் விபத்து ஏற்படாத நிலையில், எங்கிருந்து இழப்பீடு கொடுப்பது? என்று கேட்டார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின், விவசாயியை மிரட்டி அவருடன் லாரியை கடத்திச் சென்றனர். அவர்களின் திட்டப்படி, ரிங்ரோட்டில் விவசாயியை தள்ளிவிட்டு, 2.5 டன் தக்காளியுடன் லாரியை சென்னைக்கு ஓட்டிச் சென்றனர். பின்னர் சென்னையில் அந்த தக்காளியை விற்று, அவர்களுக்குள் பணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (வடக்கு பிரிவு) சிவபிரகாஷ் தேவராஜு கூறுகையில், ‘சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், லாரியுடன் தக்காளியை கொள்ளையடித்து சென்ற தம்பதி உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. தற்போதைக்கு தம்பதிகள் மட்டும் செய்து செய்யப்பட்டனர். 200 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் குற்றவாளிகள் சிக்கினர். தலைமறைவாக உள்ள மற்ற 3 குற்றவாளிகளான ராகேஷ், குமார், மகேஷ் ஆகியோரை தேடி வருகிறோம்’ என்றார்.

நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ. 120க்கும் மேல் விற்கப்படும் நிலையில், பயிரிடப்பட்ட தோட்டத்தில் இருந்து தக்காளியை கொள்ளையடித்து செல்லுதல், கடத்திச் சென்று விற்பனை செய்தல் போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதால் தக்காளி பயிரிட்டோர், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

The post லாரியுடன் விவசாயியை கடத்தி சென்று 2.5 டன் தக்காளியை கொள்ளை அடித்த வேலூர் தம்பதி கைது: கர்நாடகா போலீஸ் அதிரடி; மேலும் 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Karnataka Police Action ,Chitradurga ,Karnataka ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...