×

160க்கும் மேற்பட்ட மக்கள் பலி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வன்முறை தீயிக்கு இரு இனக் குழுக்கள் மட்டுமே காரணமா?: மணிப்பூரின் இரும்புப் பெண்மணி பரபரப்பு பேட்டி

பெங்களூரு: மணிப்பூரில் நடக்கும் வன்முறை தீயிக்கு இரு இனக் குழுக்கள் மட்டுமே காரணமா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான இரோம் ஷர்மிளா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலமானது, மேற்கே அசாம், தெற்கில் மிசோரம், வடக்கே நாகாலாந்து ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூர் மாநிலமானது அண்டை நாடான மியான்மரின் எல்லையாகக் கொண்டிருப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ளது. மணிப்பூரில் இரு இனக்குழுக்களுக்கு இடையே கடந்த மே 3ம் தேதி வன்முறை சம்பங்கள் தொடங்கியது. இன்றுடன் 81 நாட்கள் முடிந்துவிட்டது. இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் வன்முறை தீ இன்னும் அணைந்தபாடில்லை.

பெண்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்தவரும், மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் இரோம் ஷர்மிளாவிடம், தற்போது மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் குறித்து, தனியார் செய்தி சேனல் மூலம் ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் அளித்த பதில் விபரம் வருமாறு:

மணிப்பூரில் நடக்கும் சோகத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
என்னை நான் குற்றவாளியாக கருதுகிறேன். மணிப்பூர் வன்முறை சம்பவங்களானது, வேலையின்மை, போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அங்குள்ள போராளி குழுக்கள், மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் பெற்றுக் கொள்கின்றனர். அதனால் அவர்களின் கை ஓங்கியுள்ளது. ஆனால் மணிப்பூர் மக்கள் அமைதியின்றி உள்ளனர்.

மணிப்பூர் பிரச்னைக்கு என்ன தான் தீர்வு இருக்க முடியும்?
வன்முறைத் தீ எரிந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பினரும் வெறுப்பு மனநிலை கொண்டவர்கள். ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இருவரும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உடன்படமாட்டார்கள். பிரதமர் மோடி, மணிப்பூர் எம்எல்ஏக்களை சந்தித்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். இந்த விஷயத்தில் அண்டை மாநிலங்கள் தலையிடக் கூடாது. ஆனால் அவர்கள் நிலைமையை சுமூகமாக மாற்ற முயற்சி செய்யலாம்.

வன்முறைக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
மாநிலத்தில் நிலவும் பதற்றத்திற்கு மாநில தலைமையே காரணம். மணிப்பூர் மாநிலமான, இன அடையாளத்தின் அடிப்படையில் பன்முகத்தன்மை நிறைந்தது. ஒரு பக்க தலைமையின் கீழ் அரசாங்கம் செயல்படுவதால், மற்ற சமூகம் தாங்கள் உதவியற்றவர்களாக உள்ளதாக உணர்கின்றனர்.

மெய்டீஸ் – குகி மக்களுக்கு இடையிலான பிரச்னையா? அதற்கு அப்பால் ஏதாவது இருக்கிறதா?
உண்மையான பிரச்னை மெய்டீய் – குகி இன மக்களிடையே இல்லை. தவறான நிர்வாகத்தால் மக்கள் கோபமடைந்துள்ளனர். அங்குள்ள இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். ஆண்களில் பலர் குடிபோதையில் பெண்கள் மீது நடத்தும் குடும்ப வன்முறையும் பெரும் பிரச்னையாக உள்ளது.

மணிப்பூர் வன்முறையால் யாருக்கு லாபம்?
யாருக்கும் லாபம் கிடைக்காது. அவர்கள் (மக்கள்) தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். இவர்களின் செயல்பாடு நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும். இவ்விவகாரத்தில் மணிப்பூரை ஒன்றிய அரசு வேண்டுமென்றே புறக்கணிக்கிறது. சரியான நேரத்தில் சரியான தலையீடு அவசியம் தேவை.

மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் நீங்கள், எப்போது மணிப்பூருக்கு செல்வீர்கள்?
எதிர்காலத்தைப் பற்றி எனக்குத் தெரியாது, மணிப்பூருக்கு செல்ல கடவுள் திட்டமிட்டுள்ளாரா? என்று என்னால் சொல்ல முடியாது. இருப்பினும், நான் மணிப்பூருக்கு செல்ல மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது பெங்களூருவில் வசிக்கும் இரோம் ஷர்மிளா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தை சேர்ந்த டெஸ்மண்ட் குடின்ஹோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 160க்கும் மேற்பட்ட மக்கள் பலி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வன்முறை தீயிக்கு இரு இனக் குழுக்கள் மட்டுமே காரணமா?: மணிப்பூரின் இரும்புப் பெண்மணி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Manipur ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...