×

நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ‘கரு உருமாறி’ தெப்பக்குளம் ரூ.4 கோடியில் சீரமைப்பு: உடைந்த கல் மண்டபத்தில் புதிய தூண், தளங்கள் அமைக்கும் பணி தீவிரம்

நெல்லை: நெல்லைக்கு புகழ்சேர்க்கும் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் அம்பாள் சன்னதி பின்புறம் சேதமடைந்த நிலையில் உள்ள கருஉருமாறி தெப்பக்குளத்தை 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.4 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும் உடைந்த நிலையில் உள்ள கல் மண்டபத்தில் புதிய தூண்கள் மற்றும் தளங்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வற்றாத ஜீவநதியாம் தன்பொருநை என்னும் தாமிரபரணி பாயும் திருநெல்வேலி மாநகருக்கு புகழ்சேர்க்கும் வகையில் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கு சுவாமி சன்னதி வீதியில் வெளிப்புறமாக தெப்பக்குளம் ஒன்றும், அம்பாள் கோயில் வளாகத்தின் உள்ளே இரு தெப்பக்குளங்களும் உள்ளன. இதில் அம்பாள் சன்னதி, மேற்கு பிரகாரம் அருகே அமைந்துள்ள கருஉருமாறி தீர்த்த தெப்பக்குளமானது பாரம்பரிய பெருமைக்குரியது. குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இக்குளத்திற்கு வந்து புனித நீராடி அம்பாளை தரிசனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆனால், இந்த தெப்பக்குளமும், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரகார கல் மண்டபமும் முறையாக பராமரிக்கப்படாததால் சிதிலமடைந்து காணப்பட்டது.

இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக கருமாறி தெப்பக்குளம் பயன்படுத்தப்படாத நிலைக்கு சென்றது. நீண்டகாலமாக பயன்படுத்தாமல் இருந்துவந்த கருஉருமாறி தெப்பக்குளத்தையும் மற்றும் அதனருகே உடைந்து காணப்பட்ட கல் மண்டபத்தையும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நெல்லை வந்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோயிலில் சேதமடைந்தும், சிதிலமடைந்தும் காணப்பட்ட கருஉருமாறி தெப்பக்குளம் மற்றும் கல் மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து நன்கொடையாளர் உதவியுடன் ரூ.4 கோடி மதிப்பில் சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதை அடுத்து சீரமைப்பு பணி துவங்கியுள்ளது. தற்போது பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதோடு உடைந்த நிலையில் உள்ள கல் மண்டபத்தில் புதிய தூண்கள் மற்றும் தளங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கருஉருமாறி தெப்பக்குளம் மற்றும் கல் மண்டபம் பணிகள், போர்க்கால அடிப்படையில் விரைவாக நடந்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ‘கரு உருமாறி’ தெப்பக்குளம் ரூ.4 கோடியில் சீரமைப்பு: உடைந்த கல் மண்டபத்தில் புதிய தூண், தளங்கள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Nellaiyapar-Gandhimathi Ambal temple ,Karu Urumari ,Theppakulam ,Nellai ,Ambal ,
× RELATED மதுரையில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்ததால் சாலைகள் நீரில் மூழ்கின!