×

சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் டேவிஸ் பூங்கா திறக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்

ஊட்டி: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட டேவிஸ் பூங்கா சீரமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் முடித்த போதிலும் திறக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான இடங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே சிறிய பூங்காக்கள் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலம் முதலே இப்பூங்காக்கள் இருந்த நிலையில், இதனை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது. ஆனால், இடையில் பல ஆண்டுகள் இப்பூங்காக்களை பராமரிக்கப்படாத நிலையில், அனைத்து பூங்காக்களும் புதர்மண்டி சமூக விரோத செயல்கள் அரங்கேறும் கூடாரமாக மாறியது. இதனை தொடர்ந்து இப்பூங்காக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூங்காக்கள் அனைத்தும் பொலிவுப்படுத்தப்பட்டன. அதிகாலை நேரங்களில் நடைபயணத்திற்கும், மாலை நேரங்களில் நடைபயணம் மற்றும் பொழுது போக்கவும் உள்ளூர் மக்கள் பலர் இந்த பூங்காக்களை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தொடர்ந்து இந்த பூங்காக்களை பராமரிக்க கடந்த ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. நகராட்சி அதிகாரிகள் இப்பூங்காக்களை கண்டு கொள்ளாத நிலையில், அனைத்து பூங்காக்களும் பொலிவிழந்து காணப்பட்டன. இந்நிலையில், இந்த பூங்காக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில், கடந்த ஆண்டு டேவிஸ் பூங்கா சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டது. ரூ.90 லட்சம் மதிப்பில் இப்பூங்கா சீரமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. தற்போது பூங்கா சீரமைக்கப்பட்ட நிலையில், அங்கு நடை பயிற்சி மேற்கொள்ள ஏற்றவாறு நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பூங்கா சீரமைப்பு பணிகள் முடிந்து இரு மாதங்கள் ஆகிறது. ஆனால், இதுவரை பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் உள்ளது. இப்பூங்கா திறக்கப்பட்டால் உள்ளூர் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியும். இதேபோல், பள்ளிக்குழந்தைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குழந்தைகள் இங்கு சென்று விளையாடி மகிழ முடியும். எனவே, நகராட்சி நிர்வாகம் டேவிஸ் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் டேவிஸ் பூங்கா திறக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Davis Park ,Feeder ,Feedi ,Dinakaran ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா...