×

3 கழிவுநீர் அகற்றும் வாகனம் பறிமுதல்

சேலம், ஜூலை 23: சேலம் மாநகராட்சி மற்றும் அதன் தொகுப்பில் இணைந்துள்ள கருப்பூர், அயோத்தியாபட்டிணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் ₹2000 சேலம் மாநகராட்சியில் செலுத்தி 2 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் உரிய உரிமம் பெறவேண்டும். சேகரம் செய்யப்படும் கழிவுநீரை மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வெளியேற்றி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கழிவுநீர் நச்சுத்தொட்டிகளை சுத்தம் செய்தல், கழிவுநீர் அகற்றம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொழுது பாதுகாப்பற்ற முறையில் தற்காப்பு கவசம் ஏதுமின்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

கழிவுநீரை அகற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் இயந்திரங்களின் உதவியுடன் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த பணியாளர்களைக் கொண்டே பணிகள் மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலோ, மாநகராட்சியின் அனுமதி பெறாமலோ இயங்கும் வாகனங்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அந்த வாகனம் பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர். மாநகரில் கடந்த 3 மாதங்களில் உரிய அனுமதி பெறாமல் இயங்கிய3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி செயல்பட்ட 3 வாகனஉரிமையாளருக்கு ₹30ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகரில் உரியஅனுமதியின்றி கழிவு நீர் வாகனம் இயக்கினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,’’ என்றனர்.

The post 3 கழிவுநீர் அகற்றும் வாகனம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Corporation ,Karuppur ,Ayodhya Pattinam Municipal Corporation ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகள் மூடல்