×

திருச்செந்தூர் வட்டாரத்தில் திடீர் ஆய்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

திருச்செந்தூர், ஜூலை 23: திருச்செந்தூர் தாலுகா, கடம்பா உபரிநீர் வடிகால் ஓடையில் தலைவன்வடலி பாலத்தில் இருந்து உபரி நீர் வடிகால் கடலில் சங்கமிக்கும் இடம் வரை உள்ள உப்பள ஆக்கிரமிப்புகள் மற்றும் இரு தரை பாலங்கள் வெள்ள நீர் வடிவதற்கு தடையாக உள்ளதாக குற்றம்சாட்டிய மக்கள், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அப்பகுதிகளை நீர்வளத்துறை, வருவாய்துறையினருடன் கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நகராட்சி பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக நகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடனான நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசினார்.

இதில் நகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுவதையும், நகராட்சி நீரேற்று நிலையத்தையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் தோப்பூர் நீரேற்று நிலையத்திற்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதை சீர்செய்யும் பணிகள் நடைபெறும் என்.முத்தையாபுரம் பகுதியையும் பார்வையிட்ட அவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் காவல் நிலையத்தை பார்வையிட்டார். குறிப்பாக அங்குள்ள ஆய்வாளர் அறை, கைதிகள் அறை, ஆயுதஅறை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருசந்திரன், பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், திருச்செந்தூர் தாசில்தார் வாமணன், உதவிப்பொறியாளர் ஆதிமூலம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையாளர் கார்த்திக், ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post திருச்செந்தூர் வட்டாரத்தில் திடீர் ஆய்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Thiruchendur ,Thalaivanwadali bridge ,Kadamba ,Tiruchendur Taluk ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில்...