×

மாமல்லபுரம் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள்: இயக்குநர் ஆய்வு

மாமல்லபுரம், ஜூலை 23: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் கிராமக் குளத்தில் நடைபெற்று வரும் பணிக ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பொன்னையா பார்வையிட்டார்.
மாமல்லபுரம் அருகே பட்டிப்புலம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஆலடியம்மன் கோயில் தெருவில், சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில், அப்பகுதி நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டு கிராம குளம் உள்ளது.

இக்குளத்துநீரை அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகளின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. நாளடைவில் இந்த கிராம குளம் முறையான பராமரிப்பின்றி வறண்டு போய்விட்டது. மேலும், அக்குளத்தை சுற்றிலும் ஏராளமான செடிகள் முளைத்து, தற்போது முட்புதர் காடுகளாக மாறி, பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷப்பூச்சிகளின் மையமாக மாறிவிட்டது.
இதைத் தொடர்ந்து, பட்டிப்புலம் ஊராட்சியில் உள்ள கிராமக் குளத்தை முறையாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, அந்த கிராம குளத்தை தூர்வாரி சீரமைக்க, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ₹12.33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அக்குளத்தை சுற்றியிருந்த முட்புதர் காடுகள் ஜேசிபி இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. மேலும், அக்கிராம குளத்தை தூர்வாரி சீரமைத்து, அதன் கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. தற்போது அப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், பட்டிப்புலம் ஊராட்சி கிராமக் குளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது, அக்குளத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும்படி ஊராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் இந்துபாலா, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள்தேவி, சசிகலா, பட்டிப்புலம் ஊராட்சி தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தன், துணை தலைவர் வள்ளி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாமல்லபுரம் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள்: இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Anna ,Mamallapuram ,Rural Development Department ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு