×

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை; மேகதாது அணை பணிக்காக 29 வன அதிகாரிகள் நியமனம்: கர்நாடக மாநில அரசு உத்தரவு

பெங்களூரு: காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்தி ஆய்வு மேற்கொள்ள 29 வனத்துறை அதிகாரிகளை நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த வசதியாக கர்நாடக அரசின் சார்பில் ரூ50 கோடி செலவு செய்து திட்ட வரைவு (டிபிஆர்) தயாரித்து, ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சுமார் 13,000 ஏக்கர் வனத்துறை நிலம் இத்திட்டத்தை செயல்படுத்த தேவைப்படும் என திட்ட வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி காவிரி வனவிலங்குகள் சரணாலயம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் இந்த அணைக்கான திட்டம் செயல்படுத்த உள்ளதால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்கள் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது வரை இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் உள்ளது.

ஆனால் எப்படியாவது இந்த திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும் என முடிவு செய்துள்ள கர்நாடக அரசு, எத்தனை மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் எவ்வளவு வனவிலங்குகள் பாதிக்கும் என்பதை ஆய்வு செய்ய 29 வனத்துறை அதிகாரிகளை நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதன் மூலம், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான பணிகளை கர்நாடக காங்கிரஸ் அரசு துரிதப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

The post நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை; மேகதாது அணை பணிக்காக 29 வன அதிகாரிகள் நியமனம்: கர்நாடக மாநில அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Meghadatu ,Karnataka State Govt. Bengaluru ,Cauvery river ,Karnataka state government ,Dinakaran ,
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம் கட்சி...