×

இமாச்சல், உத்தரகாண்ட், லடாக்கில் கனமழை, மேகவெடிப்பால் கடும் வெள்ளப்பெருக்கு: பல மாநிலங்கள் தத்தளிப்பு

சிம்லா: இமாச்சல், உத்தரகாண்ட், லடாக்கில் கனமழை, மேகவெடிப்பால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டி பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் மழை தீவிரமடைந்தது. இதில், லடாக்கின் கங்கல்ஸ், இமாச்சலின் ரோஹ்ரு, உத்தரகாண்ட்டின் உத்தரகாசியில் மேகவெடிப்பால் சில மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், லடாக்கின் கங்கல்ஸ் பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பல கடைகள் மூடப்பட்டுள்ளன. லே நகரில் பல பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் 6 அடிக்கு மேல் கழிமண் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. ஜம்முவிலும் கனமழையால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் நோக்கி புறப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட அமர்நாத் யாத்திரை பயணிகள் சென்ற வாகனம் ரம்பன் பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இமாச்சலின் ரோஹ்ரு பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் மழை கொட்டியதில் லைலா ரிவுலெட் பகுதியில் தபா உணவகம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

அதிலிருந்த முதிய தம்பதி உட்பட 3 பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கோத்காய் டெசில் பகுதியில் பஜார் சாலையில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதே போல உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நேற்று முன்தினம் இரவு மேகவெடிப்பால் மழை கொட்டித் தீர்த்ததில் புரோலா கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம்-உத்தரகாண்ட்டை இணைக்கும் மண்டாவலி பகுதியில் ஹரிதுவார் நோக்கி சென்ற பஸ், கோடவாலி ஆற்றங்கரையோரம் வெள்ளத்தில் சிக்கியது. உடனடியாக மீட்பு பணிகள் நடந்ததால் 40 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கனமழையால் டெல்லியில் மீண்டும் யமுனை ஆற்றில் நீர் மட்டம் அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் யவத்மால் மாவட்டம் மஹாகோன் டெசில் பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு சிக்கி உள்ள 45 கிராம மக்களை மீட்க விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதே போல குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

The post இமாச்சல், உத்தரகாண்ட், லடாக்கில் கனமழை, மேகவெடிப்பால் கடும் வெள்ளப்பெருக்கு: பல மாநிலங்கள் தத்தளிப்பு appeared first on Dinakaran.

Tags : Himachal ,Utterkhand ,Ladakh ,Shimla ,Utteragand ,Himachal Pradesh ,Delhi ,Uttarakhand ,
× RELATED இமாச்சல் காங். அரசை கவிழ்க்க மோடி...