×

எண்ணூர்-மணலி பகுதியில் காற்று மாசுபாடு தடுக்க ஆண்டு வருமானத்தில் 1% நிதி ஒதுக்க வேண்டும்: தனியார் நிறுவனங்களுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை -எண்ணூர் மற்றும் மணலி சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மாசுபாடு ஏற்படுவதாகவும் அதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் எண்ணூர்-மணலி பகுதியில் காற்று மாசுபாடு குறித்து சென்னை காலநிலை நடவடிக்கை குழு (சி.சி.ஏ.ஜி) 2020 ஆய்வு நடத்தியதில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன் வந்து விசாரணை தொடங்கியது. புகாரை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் விசாரித்தனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண அமைத்த கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்தது.

தொடர்ந்து புகாரை விசாரித்த தீர்ப்பாயம், நிறுவனங்களை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான மரங்களை நட வேண்டும். இடப்பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் நிறுவனங்களை ஒட்டி உள்ள தனியார் இடங்களையும் பசுமையாக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 1 சதவீதத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒதுக்க வேண்டும். ‘மணலி சுற்றுச்சூழல் நிவாரண நிதி’ என இதற்கு பெயரிட்டு தமிழக அரசின் தலைமை செயலாளர், வனத்துறை செயலாளர் ஆகியோர் மூலம் இந்த நிதியை கையாண்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் தொழிற்சாலைகளுக்கான மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து, தொழிற்சாலை பகுதிகளில் உமிழ்வை கட்டுப்படுத்த அந்த விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

The post எண்ணூர்-மணலி பகுதியில் காற்று மாசுபாடு தடுக்க ஆண்டு வருமானத்தில் 1% நிதி ஒதுக்க வேண்டும்: தனியார் நிறுவனங்களுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ennore-Manali ,Green Tribunal ,Chennai ,Chennai-Ennur ,Manali ,Ennur-Manali ,Dinakaran ,
× RELATED இந்தாண்டுக்கான பெரியார் விருது...