×

ஒய்எஸ்ஆர் நேதன்ன நேஸ்தம் திட்டத்தில் 80,686 நெசவாளர்கள் வங்கி கணக்கில் ₹193.64 கோடி

*ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் செலுத்தினார்

திருப்பதி : ஆந்திராவில் 80 ஆயிரத்து 686 நெசவாளர்கள் வங்கி கணக்கில் ₹193.64 கோடியை முதல்வர் ஜெகன்மோகன் செலுத்தினார்.ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வெங்கடகிரி பகுதியில் நெசவாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நேற்று விஜயவாடாவில் இருந்து திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு முதல்வர் ஜெகன்மோகன் வந்தார்.

அவரை ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி, நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர் ராமச்சந்திரா, விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சர் ரோஜா, மாவட்ட கலெக்டர் வெங்கட ரமணா, எம்பி குருமூர்த்தி, எஸ்பி பரமேஸ்வர், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக வெங்கடகிரி சென்றார்.

ஒய்.எஸ்.ஆர். நெசவாளர்கள் நல திட்டத்தின் மூலம் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் நெசவாளர்களுக்கு ஆதரவாக உதவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தகுதியுடைய மற்றும் சொந்தமாக தறி வைத்திருக்கும் ஒவ்வொரு கைத்தறி நெசவாளர் குடும்பத்திற்கும் ₹24 ஆயிரம் அரசு நிதியுதவி வழங்குகிறது. இதன் ஒரு பகுதியாக 5வது ஆண்டாக மாநிலம் முழுவதும் உள்ள 80,686 நெசவாளர்களுக்கு ஒய்எஸ்ஆர் நேதன்ன நேஸ்தம் திட்டத்தின் மூலம் ₹193.64 கோடி நெசவாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் வகையில் பொத்தானை அழுத்தி முதல்வர் ஜெகன்மோகன் தொடக்கி வைத்தார்.

அப்போது முதல்வர் ெஜகன்மோகன் பேசியதாவது:ஆந்திர மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நவரத்தின திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. நமது ஆட்சி வந்த பிறகு அனைத்து திட்டங்களும் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெசவாளர்கள் நலனை காப்போம். ஒய்எஸ்ஆர் நேதன்ன நேஸ்தம் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ₹24 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஐந்தாவது ஆண்டாக மாநிலத்தில் உள்ள 80 ஆயிரத்து 686 கைத்தறி நெசவாளர்களுக்கு ₹193.64 கோடி நிதிஉதவி அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இத்திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நெசவாளர்களுக்கு ₹970 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சந்திரபாபு ஆட்சியில் நெசவாளர்கள் வறுமையில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களுக்காக எந்த ஒரு நல திட்டங்களையும் செய்யாமல் இருந்த நிலையில் நமது அரசு அமைந்த பிறகு உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிதி உதவியும், இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நேராமல் இருக்க உதவித்தொகைகளும் வழங்கி அவர்களுடைய நெசவுத்தொழில் சிறப்பாக செய்ய வழிவகைகள் செய்யப்பட்டது.

நமது அரசை எதிர்க்கட்சியினர் தேவையில்லாமல் விமர்சித்து வருகிறார்கள். மக்களின் செல்வாக்கை பெற்றுள்ள நமது அரசை கண்டு அவர்கள் ஏதாவது பேசி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களும், நமது அரசின் நலத்திட்டங்களால் பயன் பெற்று வருகிறார்கள். இதற்கு இங்கு கூடியுள்ள லட்சக்கணக்கான மக்களே சாட்சி. சிறப்பான சேவைகளை பொதுமக்களுக்காக செய்து வரும் வார்டு கிராம தன்னார்வலர்களை தவறாக சித்தரிக்கும் சிலரின் பேச்சு மிகவும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.

The post ஒய்எஸ்ஆர் நேதன்ன நேஸ்தம் திட்டத்தில் 80,686 நெசவாளர்கள் வங்கி கணக்கில் ₹193.64 கோடி appeared first on Dinakaran.

Tags : YSR ,Netanna ,Andhra ,Chief Minister ,Jaganmohan ,
× RELATED ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க...