×

ஊட்டி, குந்தாவில் பலத்த சூறாவளி காற்று தாவரவியல் பூங்காவில் மரங்கள் விழுந்தன

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரு சில தினங்களுக்கு காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதற்கு ஏற்றார் போல் கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. எனினும், ஊட்டி மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், ஒரு சில பகுதிகளில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்து நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் உள்ளிட்ட சில பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை ஊட்டியில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

இதனால், ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவாயில் பகுதியில் இருந்து டாப் கார்டன் செல்லும் சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதில், அப்பகுதியில் இருந்த குடிநீர் குழாய்கள் சேதமடைந்தது. அதிகாலை நேரம் என்பதால் சுற்றுலா பயணிகள் இல்லாத நிலையியல் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்துவுடன் ஊட்டி தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், ஊட்டியில் இருந்து பார்சன்ஸ்வேலி பகுதிக்கு செல்லும் சாலையில் மரம் ஒன்று விழுந்தது. இதனையும் தீயணைப்புத் துறையினர் அகற்றினர். தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் பல்வேறு பகுதிகளிலும் மரம் விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று பிற்பகலுக்கு பின் ஊட்டியில் மீண்டும் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்ய துவங்கியது. இதனால், குளிர் அதிகமாக காணப்பட்டது.

கூடலூரில் 2 இடங்களில் பாதிப்பு

கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மழையில் தாக்கம் குறைந்தது. கூடலூரில் இருந்து நாடு காணி வழியாக பந்தலூர் செல்லும் சாலையில் பொன்வயல் பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதேபோல், நந்தட்டி பகுதியில் பிரதான சாலையில் மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து சீரமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

The post ஊட்டி, குந்தாவில் பலத்த சூறாவளி காற்று தாவரவியல் பூங்காவில் மரங்கள் விழுந்தன appeared first on Dinakaran.

Tags : Kunta ,Botanical Park ,Nilgiri district ,Hurricane ,Botanical Zoo ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்