×
Saravana Stores

ஆரல்வாய்மொழி – காவல் கிணறு நான்குவழி சாலையை கடக்க முயன்ற மிளா வாகனம் மோதி பலி

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி-காவல் கிணறு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற மிளா அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.குமரி மாவட்டம் பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி வடக்குமலை பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகிறது. குறிப்பாக கரடி யானை சிறுத்தை குரங்கு மிளா போன்ற வன விலங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதில் குரங்கு மற்றும் மிளா ஆகியவை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது வழக்கம்.

குறிப்பாக காவல்கிணறு -ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலை மற்றும் புதிதாக போடப்பட்டுள்ள காவல்கிணறு- நாகர்கோவில் நான்கு வழி சாலையை கடந்து சென்று தெற்கு மலை பகுதிக்கு செல்வதும், அங்கிருந்து மீண்டும் சாலையை கடந்து வடக்கு மலை பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதும் அடிக்கடி நடக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழிச்சாலையினை மிளா மற்றும் குரங்குகள் கடந்து செல்கின்றபோது அவ்வழியாக வருகின்ற பேருந்துகளில் அடிபட்டு காயம் அடைவதும் பலியாகும் சம்பவமும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை நான்கு வழிச்சாலையில் ஆரல்வாய்மொழிக்கும் தோவாளைக்கும் இடையே தெற்குமலை பகுதியில் இருந்து மிளா ஒன்று வேகமாக ரோட்டை கடக்க முற்பட்டது.
அப்போது நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு நோக்கி வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக மிளா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மிளா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. காலை நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் இல்லாத காரணத்தினால் மிளாவின் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் அங்கு நிற்காமல் சென்றுவிட்டது.

இதனிடையே அவ்வழியாக வந்த சிலர் மிளா அடிபட்டு இறந்து கிடப்பதை பார்த்ததும் மற்ற வாகனங்கள் அதன் மீது மோதி விபத்துக்கு உள்ளாகி விடக்கூடாது என்பதற்காக பெரிய கட்டையை எடுத்து அருகில் வைத்ததுடன் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அடிபட்டு பலியான மிளாவை மீட்டு ஆரல்வாய்மொழி வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் மிளா மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை பற்றி வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சொகுசு கார் மிளாவின் மீது மோதி இருந்தால் சொகுசு காரின் முன் பகுதி முழுவதும் முற்றிலும் சேதம் அடைந்திருக்கும். காரின் பாகங்கள் சிதறிகிடந்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் மிளா இறந்து கிடந்த பகுதியில் எந்தவித வாகனத்தின் உதிரி பாகங்களும் இல்லாத நிலையில் மிளா மீது மோதியது கனரக வாகனங்களாகத்தான் இருக்க வாய்ப்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

The post ஆரல்வாய்மொழி – காவல் கிணறு நான்குவழி சாலையை கடக்க முயன்ற மிளா வாகனம் மோதி பலி appeared first on Dinakaran.

Tags : Mila ,Guard Wells ,oralogue-watchwell ,Kumari District ,Fourth Road of the Guard ,Dinakaran ,
× RELATED கடையம் அருகே நாய்கள் விரட்டியதில் கீழே விழுந்து மிளா சாவு