×

நாகர்கோவில் அருகே சிறுமியை கட்டாய திருமணம் செய்து போலி சான்றிதழ் தயாரித்து பிரசவம்

*வாலிபர், பெண் டாக்டர் உள்பட 6 பேர் மீது வழக்கு

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே சிறுமியை கட்டாய திருமணம் செய்ததுடன், போலி சான்றிதழ் தயாரித்து பிரசவம் பார்த்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக சிறுமியை திருமணம் செய்த வாலிபர், பிரசவம் பார்த்த பெண் டாக்டர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுமார் 20 வயது இளம்பெண் ஒருவர், நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது தாய், சமையல் வேலை செய்து என்னை காப்பாற்றி வந்தார். கடந்த 2020ல், நான் பிளஸ் 1 படித்து வந்தேன். அப்போது எனக்கு 17 வயது. கொரோனா கால கட்டமாக இருந்ததால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. எனது தாயாரும், குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரும் நெருங்கிய தோழிகள் . அவர் மூலம், எனது தாயாருக்கு பாண்டிச்சேரியில் சமையல் வேலை கிடைத்தது.

என்னை தனியாக விட்டு செல்ல மனமில்லாமல், எனது தாயார் தவித்தார். இந்த நிலையில் எனது தாயாரின் நெருங்கிய தோழியின் மகள், என்னை கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து, நானும் சம்மதம் தெரிவித்தேன்.ஆரல்வாய்மொழி அருகே உள்ள கிராமத்துக்கு வந்து அவர்கள் வீட்டில் தங்கி இருந்தேன். இந்த நிலையில் நான் தங்கி இருந்த வீட்டில் இருந்தவர்கள் எனக்கு திருமண ஏற்பாடுகளை செய்தனர்.

அப்போது எனக்கு 18 வயது நிரம்பவில்லை. நான் திருமணம் செய்து ெகாள்ள மாட்டேன் என பலமுறை கூறினேன். ஆனாலும் கேட்காமல் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த வாலிபருடன் எனக்கு திருமணம் முடித்து வைத்தனர். இதுகுறித்து அறிந்ததும் எனது தாயார் வந்து அனைவரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்களை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. திருமணத்துக்கு பின் எனது கணவர் என்னிடம் வலுக்கட்டாயமாக நடந்து கொண்டார்.

இதையடுத்து நான் கர்ப்பம் தரித்தேன். என்னை மருத்துவ பரிசோதனைக்காக நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த பெண் டாக்டரிடம், நான் மைனர், எனக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து விட்டனர், நீங்கள் காவல்துறைக்கு தகவல் கொடுங்கள் என கூறினேன். ஆனால் அந்த பெண் டாக்டர் எனது கணவர் குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். அவர் எனது கணவரிடம், உனது மனைவிக்கு 17 வயது தான் ஆகிறது.

உன் மனைவிக்கு 18 வயது முடிந்து விட்டது என கூறி போலி சான்றிதழ் தயாரித்து கொண்டு வந்தால் தான் பிரசவம் பார்க்க முடியும் என கூறினார்.அதன் பேரில் எனது கணவரும், அவரது உறவினர்கள் சிலரும் சேர்ந்து போலியாக எனது பிறப்பு சான்றிதழ் தயாரித்தனர். அதன் மூலம் ஆதார் கார்டும் பெற்றனர். அதை குழந்தை பெற தேவையான சான்றாக பயன்படுத்தி கொண்டனர். எனக்கு குழந்தை பிறந்த பிறகு நானும் சூழ்நிலைக்கேற்றவாறு வாழ தொடங்கி விட்டேன். இந்த நிலையில் எனது கணவர் வீட்டில் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை தொந்தரவு செய்ய தொடங்கினர்.

அவர்கள் கேட்ட 50 பவுன் நகையை கொடுக்கவில்லை என கூறி கடந்த 2022ம் ஆண்டு எனது தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர். நான் மைனர் பெண்ணாக இருக்கும் போதே என்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியான துன்புறுத்தியதுடன், ஆவண முறைகேடு செய்து ஏமாற்றி பிரசவம் பார்த்ததுடன், தற்போது வரதட்சணை கேட்டு கொடுமை செய்கிறார்கள். எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு இளம்பெண் கூறி இருந்தார்.

இந்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாய் லெட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி, குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் இளம்பெண்ணின் கணவர் உள்பட மொத்தம் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மைனர் பெண் என தெரிந்தும் காவல்துறை மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பிரசவம் பார்த்த இருளப்பபுரத்ைத சேர்ந்த பெண் டாக்டர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கைது நடவடிக்கை இல்லை

இந்த சம்பவத்தில் இன்னும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வில்லை என கூறப்படுகிறது. எஸ்.பி. தலையிட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் வனத்துறையில் பணியாற்றுகிறார். மற்றவர்கள் முக்கிய கோயில்களில் பூஜை பொருட்கள் விற்பனை, பராமரிப்பு பணி உள்ளிட்டவற்றை டெண்டர் எடுத்து நடத்துபவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

The post நாகர்கோவில் அருகே சிறுமியை கட்டாய திருமணம் செய்து போலி சான்றிதழ் தயாரித்து பிரசவம் appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Nagarkovil ,Nagarko ,
× RELATED ஏற்காடு தனியார் காட்டேஜில் பயங்கரம்:...