×

நிழற்குடை இல்லாததால் மாணவிகள் அவதி

 

சேலம், ஜூலை 22: சேலம் கோரிமேடு மகளிர் கலைக்கல்லூரி அருகே பயணியர் நிழற்குடை இல்லாததால் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நிழற்குடை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் ஏற்காடு சாலையில் கோரிமேட்டில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இதன் அருகிலேயே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கட்டுமான தொழிலாளர் அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளது. போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறவும் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதிகளை பதிவு செய்யவும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர். ஆனால் வேலைவாய்ப்பு அலுவலக பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால் கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பிரனரும் கடும் சிரமத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவிகள் கூறியதாவது: கோரிமேட்டில் அமைந்துள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு காலை மாலை என இரண்டு சிப்ட் சுழற்சி முறையில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகிறோம். அதே போல் அருகில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வருகின்றனர். இத்தகைய சூழலில் வேலைவாய்ப்பு அலுவலக பஸ்நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பேருந்துக்காக நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்கும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக வயதான முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ேடார் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் திடீரென மழை பெய்யும் சூழல் உள்ளது. இதனால் மாணவிகள் புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகும் நிலையும் காணப்படுகிறது. பயணியர் நிழற்குடை இல்லாததால் பேருந்துக்காக மரத்தடியில் நிற்கும் போது மழை பெய்யும் சமயங்களில் இடி மின்னல் தாக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே கல்லூரி மாணவிகளின் நலன் கருதி கோரிமேடு வேலைவாய்ப்பு அலுவலக பஸ் ஸ்டாப்பில் பெரிய அளவிலான பயணியர் நிழற்குடை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாணவிகள் கூறினர்.

The post நிழற்குடை இல்லாததால் மாணவிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Korimedu Women's Arts College ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை