×

ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்

தர்மபுரி, ஜூலை 22: ஒகேனக்கலில் அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா 3 நாள் நடக்கிறது. விழாவிற்கான முன்னேற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் அரசு சார்பில் ஆண்டுதோறும் 3 நாள் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். உள்ளூர் மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து திரளாக பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, மூன்று நாட்களும் ஒகேனக்கல் சுற்றுலா தளம் களை கட்டும். நடப்பாண்டு ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா வரும் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இவ்விழாவில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விழாவினை முன்னிட்டு 3 நாட்களுக்கும் சுற்றுலாத்துறை, சேலம் மண்டல, கலை பண்பாட்டுத்துறை, பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தினசரி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விழாவின் போது, வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்தல், தடையில்லா மின்சாரம் வழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல், குடிநீர் மற்றும் தற்காலிக கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்தல், கூடுதல் போக்குவரத்து வசதிகள்(சிறப்பு பஸ் இயக்குதல்) ஏற்பாடு செய்தல், தீயணைப்பு ஊர்திகள் ஏற்பாடு செய்தல் மற்றும் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கலில் ஆடிப்பெருக்குவிழா ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், ‘ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா வரும் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கிறது. விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொழுது போக்க கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட வேண்டும்,’ என்றார். இந்த கூட்டத்தில் பென்னாகரம் ஜி.கே.மணி எம்எல்ஏ, கூடுதல் எஸ்பி இளங்கோவன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Okanagan Celebration of Independence Day ,Dharmapuri ,Okanagan ,Adiperku festival ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு