×

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: வியாபாரிக்கு ரூ.2000 அபராதம்

அண்ணாநகர்: நெற்குன்றத்தில் வியாபாரி வீட்டில் பதுக்கிய 700 கிலோ பிளாஸ்டிக் பைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோயம்பேடு சின்மயா நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி, பிடித்து அவரது பையை சோதனை செய்தனர். அதில் சுமார் 45 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சென்னை நெற்குன்றம் பாரதிசாலையை சேர்ந்த திருவலபழம் (54) என்பதும், இவர் பல வருடங்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிளாஸ்டிக் பைகள் வாங்கி வந்து தனது வீட்டில் பதுக்கி வைத்து கோயம்பேடு மார்க்கெட் மற்றும் நெற்குன்றம் சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதியில் பெட்டிக்கடை, மளிகை கடை, ஓட்டல்கள் ஆகியவற்றுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து, போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், நேற்று மதியம் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் கோயம்பேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையில் அதிகாரிகள் அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 700 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், திருவலபழத்திற்கு ரூ.2,000 அபராதம் விதித்தனர்.

The post வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: வியாபாரிக்கு ரூ.2000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Food Safety Department ,Nelkukunram ,
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...