×

சைதாப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து ஆடிட்டரை கத்திமுனையில் மிரட்டி ரூ.7 லட்சம், 20 சவரன் கொள்ளை: கூட்டாளிகளுடன் தப்பிய கார் டிரைவருக்கு வலை

சென்னை: சைதாப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஆடிட்டர் மற்றும் அவரது குடும்பத்தினரை, முன்னாள் கார் டிரைவர் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்தி முனையில் மிரட்டி ரூ.7 லட்சம் பணம், 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தாணு மாலயன் (65). ஆடிட்டரான இவர், நேற்று தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது, ஆடிட்டரிடம் கார் டிரைவராக பணியாற்றி, வேலையில் இருந்து நின்ற உசேன் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார். பழைய டிரைவர் என்பதால் தாணு மாலயன், அவரை வீட்டிற்குள் அழைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உசேனுடன் 2 பேர் ஆடிட்டர் தாணு மாலயன் வீட்டிற்குள் நுழைந்து, அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். அப்போது சத்தம் போட்டால் ஆடிட்டரை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி, அவர்கள் வைத்திருந்த செல்போன்களை பறித்தனர். இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் சத்தம் போடவில்லை. பிறகு அனைவரையும் ஒரு அறையில் தள்ளினர்.

பின்னர், ஆடிட்டரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது வீட்டில் உள்ள பீரோவை திறக்க சொல்லி, அதில் வைத்திருந்த ரூ.7 லட்சம் ரொக்கம் மற்றும் 20 சவரன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு வீட்டில் உள்ள அறையில் தள்ளி, வெளிப்பக்கமாக கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். ஜன்னல் வழியாக கூச்சலிட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடுன் வீட்டின் அறையில் இருந்து வெளியே வந்த ஆடிட்டர் தாணு மாலயன் நடந்த சம்பவம் குறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் முன்னாள் கார் டிரைவர் உசேன் மற்றும் அவரது நண்பர்கள் பயன்படுத்திய செல்போன் சிக்னல்களை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் கத்திமுனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சைதாப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து ஆடிட்டரை கத்திமுனையில் மிரட்டி ரூ.7 லட்சம், 20 சவரன் கொள்ளை: கூட்டாளிகளுடன் தப்பிய கார் டிரைவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Saidapet ,CHENNAI ,Saitappettai ,Dinakaran ,
× RELATED திருவள்ளூரில் பட்டப்பகலில் 15 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை