×

எட்டயபுரம் அருகே அத்துமீறும் தனியார் சோலார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி நீர் வரத்து ஓடையில் உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைப்பு பனை மரங்களும் வெட்டி அழிப்பு

எட்டயபுரம், ஜூலை 22: எட்டயபுரம் அருகே தனியார் சோலார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி உயர்அழுத்த மின்கம்பங்களை அமைப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுவதுடன், இதற்காக பனைமரங்களும் வெட்டி அழிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். எட்டயபுரம் அருகே தலைக்காட்டுப்புரத்தில் அமைக்கப்பட்டு வரும் சோலார் நிறுவனம் அங்கிருந்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக எட்டயபுரம்-விளாத்திகுளம் சாலையோரம் மற்றும் அதிலிருந்து வெள்ளையம்மாள்புரம்-சிவஞானபுரம் சாலையோரம் உயர் அழுத்த மின்கம்பங்களை அமைத்து வருகிறது. தனியார் நிலத்தில் அமைத்தால் குறிப்பிட்ட பணம் இழப்பீடாக தரவேண்டும் என்பதற்காக அதிகாரிகள் துணையோடு சாலையோரம் உள்ள நீர்வரத்து ஓடை மையப்பகுதியில் அமைக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை, கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி அலுவலர்கள் என யாரிடம் புகார் அளித்தாலும் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டால் நாங்கள் உரிய அனுமதி வாங்கித்தான் அமைக்கின்றோம் என கூறுகின்றனர். எனவே அத்துமீறும் தனியார் சோலார் நிறுவன விதிமீறல் குறித்து யாரிடம் முறையிடுவது என தெரியாமல் கிராமமக்கள் திகைக்கின்றனர். கால்நடைகள் தாகம் தீர்க்கும் ஊரணிகளுக்கு செல்லக்கூடிய ஓடைகளையும் ஆக்கிரமித்து மின்கம்பங்கள் அமைத்துள்ளனர்.

அழிந்து வரும் பனைமரங்களை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக அரசு பனை மரத்தை வெட்டுவதற்கு தடைவிதித்துள்ளது. இதனால் விவசாயி தனது கரையோரங்களில் உள்ள பனைமரத்தில் ஒலை வெட்டினாலே நடவடிக்கை எடுக்கும் சம்பந்தப்பட்ட கிராம விஏஓ, தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல் மின்கம்பம் அமைக்க இடையூறாக இருக்கும் பனை மரங்களை வெட்டும் போது மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

முதலில் மின்கம்பங்களை நட்டி பனைமரங்களுக்கு இடையில் மின்வயர்களை அமைக்கும் தொழிலாளர்கள் அந்த பகுதியில் வேலை முடிந்தவுடன் மின்கம்பங்களுக்கு இடையே இருக்கும் பனைமரத்தை வெட்டிசெல்கின்றனர். இதற்கு அதிகாரிகளும் துணையாக இருக்கின்றனர். பொதுவாக மின்வாரியமே மின்கம்பங்களுக்கு இடையே உள்ள மரங்களை வெட்டுவதில்லை. மரங்கள் உயரத்தை குறைப்பார்கள் அல்லது அந்த இடத்தில் உயரமான மின்கம்பங்களை அமைக்கிறார்கள். ஆனால் தனியார் சோலார் நிறுவனம் தங்கள் விருப்பம் போல் செயல்படுகின்றனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதேபோல் மேலும் ஒரு தனியார் சோலார் நிறுவனம் மற்றும் காற்றாலை நிறுவனங்களும் விதி மீறலில் ஈடுபடுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளங்கள், ஊரணிகள், கண்மாய்களுக்கு செல்லும் நீர்வரத்து ஓடைகளை மீட்பதுடன், ஓடைகளுக்கு இடையில் இருக்கும் பனைமரங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post எட்டயபுரம் அருகே அத்துமீறும் தனியார் சோலார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி நீர் வரத்து ஓடையில் உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைப்பு பனை மரங்களும் வெட்டி அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Ettyapuram ,Ettayapuram ,Dinakaran ,
× RELATED புதூர் அருகே மெட்டில்பட்டி சந்தன மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா