- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காவிரி நடுவர் நீதிமன்றம்
- கர்நாடக
- துணை ஜனாதிபதி
- டிசி
- கெ சிவகுமார்
- பெங்களூரு
- கர்நாடகா அரசு
- காவிரி நடுவர் நீதிமன்றம்
- தின மலர்
பெங்களூரு: கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய நீரை வழங்கும். வறட்சி ஏற்பட்டால் வறட்சி காலத்தில் நீர் பங்கீடு சதவீதம் அடிப்படையில் நீரை பங்கீடு செய்து கொள்வோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் இருந்த தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறக்காமல் கர்நாடக அரசு, அலட்சியம் செய்து வரும் நிலையில் உடனடியாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க உத்தரவிடகோரி தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இந்நிலையில் நேற்று பெங்களூருவில் துணை முதல்வரும் நீர்ப்பாசனதுறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை உரிய முறையில் பெய்து வந்தது ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாமல் இருப்பதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளிலும் போதிய நீர் இருப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. கர்நாடகா-தமிழ்நாடு விவசாயிகளின் ஜீவநாடியாக இருக்கும் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் டெட்ஸ்டோரேஜ் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் மண்டியா, மைசூரு மாவட்ட விவசாயிகள் பயிர் செய்துள்ள விளைச்சலுக்கு கூட தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பெங்களூரு மாநகர மக்களுக்கு வழங்கும் குடிநீருக்கும் பிரச்னை ஏற்படும்.
நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை மதிக்கிறோம். முடிந்த வரை நீர் திறந்து விட முடிவு செய்துள்ளோம். ஆனால் பெங்களூரு நகருக்கு தேவையான அளவு குடிநீரை தேக்கி வைத்துக் கொண்டு மீதமுள்ள நீர் பங்கீடு செய்து கொள்ளப்படும். ஜூன் மாதம் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. ஜூலை மாதம் நன்றாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது சற்று நம்பிக்கை ஏற்படுத்தியது. ஆனால் ஜூலை மாதம் கடைசி வாரத்திலும் எதிர்பார்த்த மழை பெய்யாமல் ஏமாற்றி விட்டது. இது இரு மாநில விவசாயிகள் சந்தித்து வரும் ஏமாற்றமாகவுள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதி தீர்ப்பில் ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளது. மழை நன்றாக பெய்து, அணைகள் நிரம்பி இருக்கும்போது, நடுவர் மன்ற உத்தரவின்படி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஒருவேளை போதிய மழை இல்லாமல் வறட்சி நிலவும் சமயத்தில், எப்படி தண்ணீர் பங்கீட்டு கொள்ள வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளதோ, அதே நடைமுறை அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.
The post காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை வழங்குவோம்: கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் தகவல் appeared first on Dinakaran.