×

மணிப்பூர் விவகாரம் காரணமாக நாடாளுமன்றம் 2வது நாளாக முடக்கம்: மோடி அவைக்கு வர வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி

புதுடெல்லி: மணிப்பூர் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் 2வது நாளாக நேற்றும் முடங்கியது. இதுபற்றி விவாதம் நடத்தும் போது பிரதமர் மோடியை அவைக்கு வர வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூரில் மே 4ம் தேதி குக்கி இன பெண்கள் 2 பேரை கலவரக்கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்சென்று அங்குள்ள வயல்வெளியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தது. இந்த வீடியோ தற்போது வெளியாகி நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மணிப்பூர் பிரச்னை அங்கும் எதிரொலித்ததால் முதல் நாளே நாடாளுமன்றம் முடங்கியது. நேற்று 2ம் நாளும் நாடாளுமன்றம் முடங்கியது. நேற்று மக்களவை தொடங்கியதும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினார்கள். அப்போது பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,’ மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது.

ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேவையில்லாமல் அவையில் பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள். மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை. நாங்கள் விவாதம் நடத்த விரும்புகிறோம். இந்த அவையில் விவாதம் நடத்த வேண்டும்’ என்று பேசினார். ஆனால்,’ பிரதமர் மோடி எங்கே, அவர் அவைக்கு வந்தால் தான் விவாதம் நடத்த அனுமதிப்போம்’ என்று கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்ததால் மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அவை கூடிய போதும் அமளி தொடர்ந்தது.

அப்போது அவையை நடத்திய ராஜேந்திர அகர்வால்,’ மணிப்பூர் விவகாரம் மிகவும் முக்கியமான, உணர்வுப்பூர்வமான விவகாரம். இதுபற்றி அவையில் விவாதம் நடத்துவோம்’ என்றார். ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி,’ அரசு விவாதம் நடத்த தயார். மணிப்பூர் நிலைமை கண்டு ஒட்டுமொத்த நாடும் கவலை அடைந்துள்ளது. நாங்களும் அதே கவலை கொண்டு இருக்கிறோம்’ என்றார். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமர் மோடி வந்து விளக்கம் அளிக்க கேட்டு தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் இதே பிரச்னை நீடித்தது. அவை தொடங்கியதும், அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர், டெல்லி சேவைகள் மசோதாவை கொண்டு வந்தார். அதற்கு ஆம்ஆத்மி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரைன், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசினார். இதையடுத்து அவையை பிற்பகல் 2.30 மணி வரை துணை ஜனாதிபதி ஒத்திவைத்தார். அதன்பிறகு அவை கூடியதும், இதே பிரச்னை நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

* என் பேச்சை நீக்கியது ஏன்? திரிணாமுல் எம்பி ஆவேசம்
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் பேசினார். அவரது பேச்சில் 3 வார்த்தைகளை நீக்க மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தங்கர் உத்தரவிட்டார். இந்த பிரச்னையை நேற்று டெரிக் ஓ பிரையன் மீண்டும் எழுப்பினார். மணிப்பூர் பிரச்னையில் நான் நேற்று முன்தினம் பேசினேன். ஆனால் எனது பேச்சில் பிரதமர், மணிப்பூர் உள்பட 3 வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பொருந்தவில்லையா என்று கேள்வி எழுப்பினார். ஏற்கனவே மணிப்பூர் விவகாரம், டெல்லி சேவைகள் மசோதா விவகாரத்தில்சபை கூச்சல் குழப்பத்தில் இருந்தது. இந்த நேரம் டெரிக் ஓ பிரையன் தனது கருத்தை தெரிவிக்க துணை ஜனாதிபதி இருக்கை நோக்கி சென்றார். ஆனால் அவையை பிற்பகல் 2.30 மணி வரை தன்கர் ஒத்திவைத்து விட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார்.

* ஆம்ஆத்மி எம்பிக்களுடன் துணை ஜனாதிபதி மோதல்
மாநிலங்களவை நேற்று தொடங்கியதும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லியில் சேவைகள் குறித்த அவசரச் சட்டத்தை மாற்றும் திருத்தம் மசோதாவை கொண்டு வருவதாக வாசிக்க தொடங்கினார். இதை கேட்டதும், ஆம் ஆத்மி எம்பிக்கள் இந்த மசோதாவை “அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி குரல் எழுப்பினார்கள். சஞ்சய் சிங், ராகவ் சதா உள்ளிட்டோரை ஜெகதீப் தன்கர் தனிப்பட்ட முறையில் எச்சரித்தும் அவர்கள் அமளி செய்தனர். மேலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான எந்த மசோதாவையும் கொண்டு வர முடியாது’ என்றனர். ஆனால் மாநிலங்களவை தலைவர் மசோதாவை அவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முயன்றார். அப்போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரமோத் திவாரி பேசியதால் அமளி ஏற்பட்டு மசோதா மீதான மோதல் முடிவுக்கு வந்தது.

* நாடாளுமன்ற துளிகள் ரயில்வேயில் 5 ஆண்டுகளில் 13 முறை சிக்னல் பிரச்னை
ஒடிசா பாலாசோரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர்கள் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு: கடந்த 5 ஆண்டுகளில், இன்டர்லாக் சிக்னல் அமைப்பில் உள்ள குறைபாடுகளால் எந்த விபத்தும் நடக்கவில்லை. ஆனால் 5 ஆண்டுகளில், சிக்னல் பிரச்னை நடந்தது மொத்த எண்ணிக்கை 13 ஆகும். கவாச் என்ற தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு இதுவரை 1,465 வழித்தட கிமீ மற்றும் 121 இன்ஜின்களில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2.12 லட்சம் பெண் குழந்தைகள் மாயம்: கடந்த 5 ஆண்டுகளில் 2.12 லட்சம் பெண்கள் உட்பட 2.75 லட்சம் குழந்தைகள் காணாமல் போய் உள்ளதாக ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மாயமான 2.40 லட்சம் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

* ரூ.9,000 கோடி வரி ஏய்ப்பு செய்த சீன மொபைல் நிறுவனங்கள்
மாநிலங்களவையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதில் வருமாறு: 2018-19 மற்றும் 2022-23 க்கு இடையில் சுங்க வரி மற்றும் ஜிஎஸ்டியை உள்ளடக்கிய சுமார் ரூ. 9,000 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் சீன மொபைல் நிறுவனங்களிடம் இருந்து ரூ.1,629.87 கோடியை அரசு மீட்டுள்ளது. ஒப்போ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.5,086 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விவோ நிறுவனம் ரூ.2,923.25 கோடி மதிப்பிலான வரி ஏய்ப்பு செய்துள்ளது. ஷாவ்மி நிறுவனத்தில் ரூ.851.14 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. லெனோவா ரூ.42.36 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்துள்ளது. ஒப்போவிடமிருந்து ரூ.1,214.83 கோடியும், விவோவிடமிருந்து ரூ.168.25 கோடியும், சியோமியிடம் இருந்து ரூ.92.8 கோடியும் அரசால் மீட்க முடிந்தது. 2021-22ம் ஆண்டில் சீன மொபைல் கைபேசி நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை மட்டும் இந்தியாவில் ரூ.1.50 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* தக்காளி விலை குறையும்
ஒன்றிய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகம் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் அதன் சில்லறை விற்பனை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவின் நாசிக், நாரியன்கான் மற்றும் அவுரங்காபாத் பகுதிகள் மற்றும் மத்திய பிரதேசத்தில் பயிரிடப்பட்ட தக்காளி கொண்டு வரப்படுவதால் விரைவில் விலை குறையும்,’’ என்று கூறினார்.

* ராணுவத்தில் மேஜர், கேப்டன் அதிகாரிகள் பற்றாக்குறை
ராணுவத்தில் 6,800க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களைக் கொண்ட மேஜர் மற்றும் கேப்டன் நிலைகளில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. ஆனால் தற்போதைய செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பலம் இருப்பதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்தார். ராணுவத்தில் மேஜர் பதவி காலியிடங்கள் 2,094, 4,734 கேப்டன் பதவி காலியிடம் உள்ளது. கடற்படையில் 2617 லெப்டினன்ட் கமாண்டர் காலியிடம் உள்ளது. விமானப்படையில் 881 ஸ்க்ராட்ரான் லீடர் பதவி, 940 விமான லெப்டினன்ட் பதவி காலியிடம் உள்ளது என்றார்.

இந்திய குடியுரிமையை கைவிட்ட 87,000 பேர்: இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 87,026 இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்தார். 2011 முதல் 17.50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

The post மணிப்பூர் விவகாரம் காரணமாக நாடாளுமன்றம் 2வது நாளாக முடக்கம்: மோடி அவைக்கு வர வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி appeared first on Dinakaran.

Tags : Parliament ,Manipur ,Modi ,New Delhi ,Amali ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...