×

நகராட்சி நிர்வாகத்துறையில் அதிக பணியிடங்கள் ஏற்படுத்தியதற்காக முதல்வருக்கு மாநகராட்சி தூய்மை பணி ஆய்வாளர், அலுவலர் சங்கம் நன்றி

பூந்தமல்லி: நகராட்சி நிர்வாகத்துறையில், அதிக பணியிடங்கள் ஏற்படுத்தியதற்காக முதல்வருக்கு த.நா. நகராட்சி, மாநகராட்சி தூய்மை பணி ஆய்வாளர், அலுவலர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி தூய்மை பணி ஆய்வாளர் மற்றும் தூய்மை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ், செயலாளர், செந்தில்ராம் குமார், பொருளாளர் இளங்கோ, தலைமையிடத்து செயலாளர் கோவிந்தராஜூ ஆகியோர் புதியதாக பொறுப்பேற்று இருக்கும் நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசவை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் , தங்கள் கோரிக்கைகளை மனுவாக அவரிடம் வழங்கினர்.

அம்மனுவில், நகராட்சி நிர்வாகத் துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு நிறைய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது .அதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் உயர் அலுவலர்களுக்கும் நன்றி. அப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே துறையில் பணியாற்றியபோதும் நகராட்சி தூய்மை அலுவலர்களுக்கும், மாநகராட்சி தூய்மை அலுவலர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மண்டல அளவில் தூய்மை அலுவலர்களுக்கு பதவி உயர்வு வேண்டும். நகராட்சிகளில், மாநகராட்சிகளில் பணிபுரியும் நகர்நல மருத்துவர்களுக்கு மருத்துவம் சார்ந்த பணிகளும், தூய்மை அலுவலர்களுக்கு பொது சுகாதார பணிகளையும் ஒதுக்கி பணிபகிரவேண்டும்.

ஏனென்றால் நிறைய நகராட்சிகளில் துப்புரவு அலுவலர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் நகர்நல அலுவலர் பணியிடமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதனால் பணி பகிர்வில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நகராட்சிகளின் திடக்கழிவு மேலாண் பணிகளை பொது சுகாதாரத்துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு கவனிக்கும் நிலை தவிர்க்க வேண்டும். மேலும், நகராட்சி, மாநகராட்சிகளில் ஏற்கெனவே சானிடரி இன்ஸ்பெக்டர்கள் எனப்படும் சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிந்து வரும்போது பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை மூலம் நகர்ப்புற மருத்துவமையங்கள் துவங்கப்பட்டு அவற்றில் புதியதாக 500 சுகாதார ஆய்வாளர்களை (ஹெல்த் இன்ஸ்பெக்டர்) நியமித்துள்ளனர்.

இதனால் ஒரே நகர்ப்பகுதிகளில் இரு துறைகளின் சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. இதன்மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகளின் சுகாதார ஆய்வாளர்களான சானிடரி இன்ஸ்பெக்டர்கள் பணிகளில் பொது சுகாதாரத்துறை சார்ந்த சுகாதார ஆய்வாளர்களின் பணி குறுக்கீடு ஏற்படும். தூய்மை அலுவலருக்கு திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்ய, பொது சுகாதார பணிகளைக் கவனிக்க, ஜீப் வாகனம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள தூய்மை அலுவலர் பணியிடங்களை விரைவில் நிரப்பிட வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டு இருந்தது. அந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த நகராட்சி நிர்வாக இயக்குநர், கோரிக்கைகள் நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் விஜய குமார் உடனிருந்தார்.

The post நகராட்சி நிர்வாகத்துறையில் அதிக பணியிடங்கள் ஏற்படுத்தியதற்காக முதல்வருக்கு மாநகராட்சி தூய்மை பணி ஆய்வாளர், அலுவலர் சங்கம் நன்றி appeared first on Dinakaran.

Tags : Corporation Sanitation Work Inspector, Officers Association ,Chief Minister ,Poontamalli ,Municipal Corporation Cleanliness Work Inspector, Officers Association ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...