×

திருவில்லி.யில் நாளை ஆண்டாள் கோயில் தேரோட்டம்: 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

* விழாக்கோலம் பூண்டது நகரம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இதனால், நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திர தினத்தில், ஆண்டாள் பிறந்த நாளையொட்டி தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு ஆடி பூரம் நட்சத்திரம் நாளை (ஜூலை 22) வருகிறது. இதையொட்டி, கடந்த 14ம் தேதி ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி கோயில் முன்புறம் உள்ள ஆடிப்புர கொட்டகையில் கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் மாலை வேளைகளில் நடைபெற்று வந்தன. நாளை (ஜூலை 22) காலை 8.05 மணியளவில் தேரோட்டம் தொடங்கி நடக்கிறது. இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும்போது, அதை பின்னால் இயந்து தள்ளுவதற்கு ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தேரோட்டம் நடக்கும் நான்கு ரதவீதிகளில் சக்கரம் பதியும் இடங்களில் ராம்கோ நிறுவனம் சார்பில் ரூ.பல லட்சம் மதிப்புள்ள 40 பெரிய இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டுள்ளன. திருவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிடம், நடமாடும் கழிப்பிட வாகனங்கள் செய்து தரப்பட்டுள்ளன. கூட்டத்தை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்க அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மகளிர் தங்கள் நகைகளை பாதுகாக்கும் வகையில், சேப்டி பின் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து விடுதிகளில் தங்கியுள்ளனர். இதனால், அனைத்து லாட்ஜூகளும் நிரம்பி வழிகின்றன. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இதனால், நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ரங்கத்தில் இருந்து ஆண்டாளுக்கு வஸ்திரங்கள் வந்தன திருச்சி: வில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும் தொண்டு செய்து அவருக்கு மனைவியானாள். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் என்பதால் வில்லிபுத்தூர் கோயிலுக்கும், ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கும் இடையே சம்பந்தமும், உறவும், மங்கல பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வருகிறது. ரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் வில்லிபுத்தூரில் இருந்தும், வில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ரங்கத்தில் இருந்தும் மங்கல பொருட்கள் வழங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டு வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை(22ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி ரங்கம் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கல சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இதையொட்டி நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ரங்கம் கோயில் ரங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் மங்கல பொருட்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணியளவில் ரங்கம் கோயில் நிர்வாகத்தினரால் இந்த மங்கல பொருட்கள் வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோயில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை நடைபெறும் வில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தின்போது, தேரில் எழுந்தருளுவார்.

The post திருவில்லி.யில் நாளை ஆண்டாள் கோயில் தேரோட்டம்: 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvilli ,Andal Temple Churches ,Annal Temple ,Thiruvilliputtur ,
× RELATED திருவில்லியில் இன்று மின்தடை