×

ரூ.40க்கு புல் மீல்ஸ்… ரூ.20க்கு சைடிஷ்…

பசியைப் போக்கும் பட்ஜெட் உணவகம்!

சென்னை பாரிஸ் கார்னர், ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்திருக்கிறது உழைப்பாளர்களின் உணவகம். பெயருக்கு ஏற்றாற்போல் உழைப்பாளர்களின் பசியைப் போக்கிக்கொண்டிருக்கிறது இந்த உணவகம். 40 ரூபாய் இருந்தால் மதியம் பசியாறிவிடலாம். மீன்வறுவல், நண்டு என 20 ரூபாய்க்கு சைடிஷ் கிடைக்கிறது. இதனால் இப்பகுதியில் பணியாற்றும் உழைப்பாளிகள் இங்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். சதீஷ் என்ற இளைஞரும், அவரது தாயார் ஏகத்தாவும் இணைந்துதான் இந்தக் கடையை நடத்தி வருகிறார்கள். சதீஷிடம் பேசினோம். உணவகம் பிறந்த கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.‘‘நான் பாரிஸ்கார்னர் கடைத்தெரு பகுதியில் மூட்டை தூக்கும் வேலை செய்து வருகிறேன். அங்கே சாப்பிடப் போகும்போதெல்லாம் நிறைய செலவானது. சாப்பாடும் அவ்வளவு சுவை இல்லாமல் இருந்தது. என்னைப் போலவே உழைக்கும் மக்கள் பலரும் நல்ல உணவு கிடைக்காமல் தவிப்பதைப் பார்த்தேன். பொதுவாக, வேர்வை சிந்த உழைக்கும் மக்களுக்கு ஆகாரமே ஆதாரம். இதை நான் நன்கு உணர்ந்தவன் என்பதால், சின்னதா ஒரு உணவகம் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் வந்தது. ஏனென்றால் நான் சிறுவனாக இருந்தபோதே, என் அப்பா இறந்துவிட்டார்.

அம்மா எங்க வீட்டு வாசலிலேயே டிபன் கடை வைத்து நடத்தித்தான் என்னையும், என் தங்கையையும் வளர்த்தார். இந்த விஷயத்தை அம்மாவிடம் சொன்னதும், மறுப்பேதும் சொல்லாமல் சரி என்று துணை நின்றார். இது உழைக்கும் மக்களுக்காக தொடங்கிய உணவகம் என்பதால், உழைப்பாளர்களின் உணவகம் என்றே பெயர் வைத்துவிட்டேன். தற்போது உணவகம் தொடங்கி 2 ஆண்டுகளை கடந்துவிட்டோம். ஒரு மீல்ஸ் 40 ரூபாய் விலையில் கொடுக்கிறோம். பணம் இல்லை என்றாலும் பசி என்று வந்து கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவை வழங்கி வருகிறோம். சிலர், 10 ரூபாய், 20 ரூபாய் கொடுத்து விட்டுக்கூட சாப்பிட்டுவிட்டு போகிறார்கள்.மதியம் மீல்ஸில் சாதம், மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, சாம்பார், காரக்குழம்பு, மீன் வறுவல், முட்டை, ரசம் இருக்கும். இதைத் தவிர, சைடிஷ்ஷாக இறால் தொக்கு, சுறா புட்டு, மீன் வறுவல், நண்டு, கடம்பா போன்ற கடல் உணவுகள், தலைக்கறி தொக்கு, ஈரல் தொக்கு வகைகள், காடை ப்ரை என எல்லா அசைவ வகைகளும் உண்டு. சைடிஷ் ஒவ்வொன்றும் 20 ரூபாய் விலையில் கொடுக்கிறோம். எல்லாமே அன்லிமிட் தான் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்த அன்லிமிட் ஏனென்றால், இங்கு சாப்பிட வரும் அனைவரும் உழைக்கும் வர்க்கத்தினர்.

கடுமையான உழைப்பாளிகள். அவர்களுக்கு அளவு சாப்பாடு சாப்பிட்டால் வயிறு நிறையாது. எனவேதான் அன்லிமிட்டெட்டாக உணவை வழங்கி வருகிறோம். உணவுகளை எல்லாம் தை இலையில் வைத்துதான் பரிமாறுகிறோம். அதுகூட எங்களது கடைக்கு ஒரு அடையாளமாக மாறிவிட்டது. மதிய உணவு மட்டும்தான் வழங்கி வருகிறோம். இரவு உணவு வேண்டும் என்று கேட்கும் ரெகுலர் கஸ்டமர்கள் சிலருக்கு மட்டும், சமைத்து பார்சல் கட்டி தந்துவிடுவோம். இது தவிர, எங்கள் கடை அருகில் பள்ளி ஒன்று இருக்கிறது. அங்கு வரும் குழந்தைகள் பலரும் காலையில் சாப்பிட நேரம் இல்லாமலும், சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லாமலும் வருவதை அறிந்தோம். எனவே, அவர்கள் பசியாறும் வகையில், காலை நேரத்தில் வெஜ் பிரஞ்சி தயார் செய்து, 10 ரூபாய் விலையில் வழங்கி வருகிறோம். பத்து ரூபாய்தான் என்பதால், குழந்தைகள் சுலபமாக வாங்கிக் கொள்கிறார்கள். அதையே சில குழந்தைகள் பார்சல் வாங்கிக் கொண்டு மதிய உணவாகவும் சாப்பிடு கிறார்கள்.

தற்போது, சமைப்பது முதல்கொண்டு, உணவகத்தை அம்மாதான் முழுக்க முழுக்க நடத்தி வருகிறார். என் தங்கை மற்றும் என் மனைவியும் அவருக்கு உதவியாக, இருக்கிறார்கள். நான் காலையில், அம்மாவை மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று தேவையானவற்றை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு, ஆட்டோ ஓட்ட சென்றுவிடுவேன். இரவு நேரத்தில் மூட்டை தூக்கும் வேலையையும் தொடர்ந்து வருகிறேன். தற்போது, கடையை எங்கள் வீட்டிற்கே மாற்றிவிட்டோம். கடை அருகிலேயே வீடு இருந்ததால், கஸ்டமர்கள் யாருக்கும் பிரச்னை இல்லாமல் போய்விட்டது. கடையை அம்மாவுக்காக வைத்து கொடுத்துவிட்டேன். யார் கையையும் எதிர்பார்க்காமல், அவருக்கு தேவையானதை அவரே ஈட்டிக் கொள்கிறார். எங்களுக்கு தேவையானதையும் செய்து கொடுக்கிறார்.வருங்காலத்தில் கடையை கொஞ்சம் பெரிதாக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கான முயற்சியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறோம்’’ என நெகிழ்ச்சியாக பேசுகிறார் சதீஷ்.

– தேவி
குமரேசன்.

ஆட்டு ஈரல் தொக்கு

தேவையானவை

ஆட்டு ஈரல் – அரை கிலோ
எண்ணெய் – 3 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை – 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
சீரகத் தூள் – கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 3
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 5
கொத்துமல்லி இலைகள் – 1 கைப்பிடி
புதினா இலைகள் – 1 கைப்பிடி
தயிர் – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி.

செய்முறை:

வாணலி வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். பொரிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும். வெங்காயம் கண்ணாடிப் பதத்தில் வதக்கினால் போதுமானது. பின் சுத்தம் செய்த ஈரலை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக மஞ்சள் சேர்த்து கிளறிவிடவும். இதனால் ஈரலின் வாடை போய்விடும். அடுப்பு சிறு தீயில் இருக்க வேண்டும். அடுத்ததாக தக்காளி, மிளகாய்த் தூள், கொத்துமல்லி, புதினா, உப்பு சேர்த்து வதக்கிவிட்டு மூடிவிட வேண்டும். தண்ணீர் ஊற்றக் கூடாது. ஈரல் மற்றும் தக்காளிச் சாறு சேர்ந்து அதிலேயே தண்ணீர் நிற்கும். எனவே தண்ணீர் சேர்க்கக்கூடாது. 10 நிமிடங்கள் கழித்து திறந்து கிளறிவிடவும். பின்னர், 5 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் ஈரல் வெந்து தண்ணீர் வற்றி இருக்கும். அப்போது சீரகத்தூள் சேர்க்க வேண்டும். பின் மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும். ஆட்டு ஈரல் தொக்கு தயார்.

The post ரூ.40க்கு புல் மீல்ஸ்… ரூ.20க்கு சைடிஷ்… appeared first on Dinakaran.

Tags : Saidish ,Pillayar Temple Street ,George Town ,Paris Corner, Chennai ,
× RELATED சென்னையில் 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு..!!