×

ஒன்றிய அமைச்சரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை!: கர்நாடகா இதுவரை 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது.. அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!!

சென்னை: கர்நாடகா இதுவரை 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக காவிரியில் உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி, ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் நேரில் வழங்கினார். கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே தமிழகத்தில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து அமைச்சர் துரைமுருகன் தமிழகம் திரும்பிய நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அமைச்சர், தமிழகத்திற்கு சுமார் 26 டி.எம்.சி தண்ணீர் கர்நாடக அரசு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் 3 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்து விட்டுள்ளது. டெல்டா மாவட்டத்திற்கு இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் தர முடியும். எனவே, இதனை முன் கூட்டியே உணர்ந்து தான் கடந்த 5ம் தேதியே நான் டெல்லிக்கு சென்று நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து உடனடியாக நீரை திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

இரு மாநிலங்களிலும் நீர் பற்றாக்குறை இருக்குமானால், அப்போது இருக்கும் நீரை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்ற பொறுப்பு காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தான் உள்ளது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக இருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தை விரைந்து செயல்படுங்கள் என்று சொல்லுகிற அதிகாரம் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருக்குத் தான் உள்ளது. அதனை வலியுறுத்தத்தான் கடந்த 5ம் தேதி ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தேன். ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 2வது முறையாக மீண்டும் அவரை சந்தித்து காவிரி நீர்கேட்டு கடிதம் வழங்கினேன். தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக காவிரியில் உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உள்ளேன். ஒன்றிய அமைச்சரும் நிலைமையை உணர்ந்து ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என குறிப்பிட்டார். மேலும் மணிப்பூர் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கேட்டுக் கொண்டார்.

The post ஒன்றிய அமைச்சரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை!: கர்நாடகா இதுவரை 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது.. அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Karnataka ,Duraimurugan ,Chennai ,Tamil Nadu ,Water Resources ,Kuruvai ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி