×

நெட்டே நெட்டே பனைமரமே!..

தமிழ்நாட்டிற்கும், பனை மரத்திற்கும் நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்பு இருக்கிறது. திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மையான இலக்கிய வளங்கள் பனையோலையில்தான் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன. தமிழர்களின் வீடுகள் பனையின் ஓலைகள், வாரைகளைக் கொண்டுதான் எழுந்தன. குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் பனையில் இருந்துதான் பிறந்தன. தமிழர்களின் உணவுகள் பெரம்பாலும் பனையைச் சார்ந்தே இருந்தன. இவ்வாறு இருந்ததால் பனை தமிழ்நாட்டின் மாநில மரமாக போற்றப்படுகிறது. பனையின் இத்தகைய சிறப்புகளை பொதுமக்களும், மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ‘’ நெட்டே நெட்டே பனைமரமே என்ற காலப்பேழை (coffee table) புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை கடந்த வாரம் நமது மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

பனையின் முக்கியத்துவம் கருதி, கடந்த 2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதலாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனைமரத்தின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும், பனை பொருட்களை மதிப்புக் கூட்டுதல் மூலம் பனைத்தொழிலை மேம்படுத்தவும், பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பனை குறித்து தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற பனைமரங்கள் அதிகம் காணப்படும் மாவட்டங்களில் களஆய்வு நடத்தப்பட்டன. பனை குறித்து பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டதோடு, புகைப்படங்கள் எடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இதில் இடம்பெற்ற புகைப்படங்கள், சேகரிக்கப்பட்ட செய்திகளை உள்ளடக்கிய ஆவணம்தான் “நெட்டே நெட்டே பனைமரமே” என்ற தலைப்பிலான காலப்பேழை.

வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 68 கோடியே 82 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள், முதன்மைப் பதப்படுத்தும் மையங்கள், சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு வசதியுடன் கூடிய துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கான கல்விசார் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில்தான் நெட்டே நெட்டே பனைமரமே காலப்பேழை வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், டிஆர்பி ராஜா மற்றும் வேளாண்மை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
– அ.உ. வீரமணி

 

The post நெட்டே நெட்டே பனைமரமே!.. appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil ,Tirukkural ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...