×

மதத்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேரில் சந்தித்தனர் பொது சிவில் சட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதி

*முதல்வர் ஜெகன்மோகன், சந்திரபாபு அறிவிப்பு

திருமலை : பொதுசிவில் சட்டத்துக்கு எதிராக முஸ்லிம் மத தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முதல்வர் ஜெகன்மோகன், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினர். அப்போது பொதுசிவில் சட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொதுசிவில் சட்டம் குறித்து விவாதம் நடந்து வருகிறது.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு தயாராகி வருவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை, துணை முதல்வர் அம்ஜத் பாஷா முன்னிலையில் முஸ்லிம் மதத்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தாடேப்பள்ளியில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது முதல்வர் ஜெகன்மோகன் கூறியதாவது:இந்த அரசு உங்கள் அரசு. உங்கள் உரிமைகள் மற்றும் மனதை பாதிக்கும் வகையில் இந்த அரசு ஒருபோதும் செயல்படாது. பொது சிவில் சட்டத்தில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் இதுவரை தெரியாது. ஆனால், ஊடகங்களில் பல இடங்களில் விவாத பொருளாக பரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனை பார்த்து முஸ்லிம் மத தலைவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஆகையால், சில விஷயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சில முஸ்லிம்கள் எதிரானவர்கள் என்று பெரும் பிரச்சாரம் நடந்து வருகிறது. மதத்தலைவர்களாகிய நீங்கள் அத்தகையவற்றை திரும்ப பெறவேண்டும். ஒரே வயிற்றில் பிறக்கும் குழந்தைகளின் விஷயத்தில் எந்த தந்தையும், தாயும் வேறுபாடு காட்டுவது ஏன்?

பெண்களுக்கு சம உரிமை என்பதில் சமரசம் இல்லை என்பதை தெளிவுப்படுத்துவோம். இந்தியா மிகவும் பன்முகத்தன்மை கொண்டது. இந்த நாட்டில் பல மதங்கள், பல சாதிகள், பல பிரிவுகள் உள்ளன. ஒரே மதத்தில் உள்ள பல சாதிகள் மற்றும் சமூகங்கள் பல்வேறு மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்களை கொண்டுள்ளன. அவர்கள் தங்கள் மத நூல்கள், நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் அவர்களின் தனிப்பட்ட சட்டத்தை பின்பற்றி வருகின்றனர்.

எந்தவொரு விதியும், ஒழுங்குமுறையும் சுமூகமாக கொண்டு வரப்பட வேண்டும் என்றால், அது நேரடியாக அரசாங்கத்தால் செய்யப்படுவதற்கு பதிலாக அந்தந்த மதங்களின் அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட குழு மூலம் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் அந்தந்த மத கோட்பாடுகள் அவர்களுக்கே முழுமையாக அறிந்திருக்க முடியும். தங்களின் சமூகத்திற்கு எங்கள் ஆட்சி துணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுவை, மங்களகிரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சட்ட மேலவையின் முன்னாள் தலைவர் ஷெரீப் தலைமையில் முஸ்லிம் மத தலைவர்கள், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தங்கள் ஆதரவை கேட்டு சந்தித்தனர். அப்போது சந்திரபாபு கூறுகையில், ‘நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிரான பொது சிவில் சட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பேன்’. மத நம்பிக்கைகளுக்கு ஆதரவாக நிற்பதாக உறுதி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

The post மதத்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேரில் சந்தித்தனர் பொது சிவில் சட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதி appeared first on Dinakaran.

Tags : Muslims ,Jeganmohan ,Chandrababu ,Thirumala ,Muslim ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...