×
Saravana Stores

தஞ்சாவூர் மாவட்டத்தில் துவங்கியது கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் விநியோகம்

*முதல் கட்டமாக 3.72 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு டோக்கன்

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பம், டோக்கன் வினியோகிக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. இதில் முதல் கட்டமாக 3.72 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.தமிழகத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகத்தான திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக 850 ரேஷன் கடைகளில் உள்ள 3 லட்சத்து 72 ஆயிரத்து 506 குடும்ப அட்டைதாரர்களிடம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று தஞ்சை, திருவையாறு, வல்லம், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த டோக்கனில் எப்போது விண்ணப்பங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும், அதற்கான தேதி, நேரம் மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் ரேஷன் கார்டு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தப் பணியில் ரேஷன் கடை பணியாளர்கள், தன்னார்வலர்கள், இல்லம் தேடி கல்வி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும் 23ம் தேதி வரை விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி நடைபெறுகிறது.

2ம் கட்டமாக 333 ரேஷன் கடைகளில் உள்ள 3 லட்சத்து 39 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதாரர்களிடமும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும்.
இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் விண்ணப்ப பதிவு முகாம் அந்தந்த ரேஷன் கடை பகுதியில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வரும் 24ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறும். அந்த முகாம்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.‌தங்களது டோக்கனில் எந்த தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளதோ அன்றைய தினம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சரிபார்ப்பு போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் எந்தவித ஆவணங்களின் நகலும் இணைக்க தேவையில்லை‌. மேலும் பயனாளிகளின் விரல் ரேகை பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் துவங்கியது கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur District ,Token ,Thanjavur ,Thanjam District ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் நவ.5ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்