×

பாளை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 26 பேர் காயம்

*மருத்துவமனைக்கு சென்று கலெக்டர் ஆறுதல்

கேடிசி நகர் : பாளை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 26 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.பாளை ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த சூசைமரியான்(80) என்பவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து நெல்லை மாவட்டம் பரப்பாடி தளவாய்புரத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெண்கள் உள்பட 26 பேர் நேற்று காலை வேனில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தனர்.

பரப்பாடி அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தைச் சேர்ந்த இசக்கிதுரை என்பவர் வேனை ஓட்டி வந்தார். பாளை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் வந்தபோது வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் வேன் டிரைவர் இசக்கிதுரை மற்றும் வேனில் பயணம் செய்த தளவாய்புரத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து(60), மாடசாமி மனைவி முருகம்மாள்(35), தங்ககனி(52), சகுந்தலா(57), வேல்கனி(37), செல்லம்மாள்(60), முத்துக்கனி(39) உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுதொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தில் காயமடைந்தவர்களை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், நெல்லை அரசு மருத்துவமனைக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களுக்கு பரிந்துரை செய்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து 26 பேர் விபத்தில் சிக்கிய சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post பாளை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 26 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Pala ,KDC ,Nagar ,Paal ,Dinakaran ,
× RELATED வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் சிக்கினர்