×

அக்டோபரில் 31வது அறிவியல் ஆய்வு போட்டி

*மாணவர்கள் பங்கேற்கலாம்

ஊட்டி : ஊட்டியில் 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் ஆய்வு போட்டி அக்டோபர் மாதம் நடக்கிறது. ஒன்றிய அரசு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் சார்பாக தேசிய அளவில் மாணவர்களுக்கு ஆய்வு கட்டுரை போட்டியினை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த போட்டியினை நடத்தும் பொறுப்பினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்று சிறப்பாக நடத்தி வருகிறது.

இந்த போட்டி தொடர்பாக வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜெயகுமார் தலைமை வகித்தார். இப்போட்டியினை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் கே.ஜே.இராஜு அறிமுகப்படுத்தி பேசியதாவது:30 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் பகுதியில் இருந்த ஒரு கிராமத்தில் மாணவர்கள் செய்த ஆய்வின் காரணமாக ஒரு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

திருப்பூரில் சாயப்பட்டறைகள் மூடப்பட்டதற்கு மாணவர்கள் செய்த ஒரு ஆய்வினை உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டதால்தான் நீலகிரியில் அந்நிய தாவரங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவிற்கு மாணவர்களின் ஆய்வுகட்டுரையும் ஒரு காரணம். இந்த போட்டியில் இரண்டு மாணவர்கள் ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் மூன்று மாதங்களுக்கு தாங்கள் வசிக்கும் பகுதியில் காணப்படும் ஏதாவது ஒரு சுற்றுச்சூழல் பிரச்னையால் பொதுமக்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் சுகாதார பிரச்னையை ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும். சிறந்த ஆய்வுகளை செய்யும் மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் அளிக்கப்படும்.

இந்த போட்டி மாணவர்களுக்கு நாட்டை நிர்மாணிக்கும் ஒரு பயிற்சி. இவ்வாறு அவர் பேசினார். சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்ட ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கானுயிர் துறையின் தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் நீலகிரி மாவட்டத்தின் பல சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்தும், அவற்றிற்கான தீர்வு காண்பது குறித்தும் விளக்கி பேசினார்.

நெஸ்ட் அறக்கட்டளையின் தாளாளரும், நீலகிரி மாவட்ட தேசிய பசுமைப்படை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான சிவதாஸ், மூலிகைகளும் மக்கள் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான மனோகரன் ஒரு லட்சிய ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினார்.

விஞ்ஞானி ஜனார்த்தனன் காலநிலை மாற்றம் குறித்து பேசினார். இந்த போட்டியில் 10 முதல் 17 வயது வரையிலுள்ள பள்ளி செல்லும் மாணவர்கள் மட்டுமல்லாமல் பள்ளி செல்லாத குழந்தைகளும் பங்கேற்கலாம். பதிவு செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31ம் தேதி என அறிவிக்கப்பட்டது. அறிவியல் ஆய்வு போட்டி வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது. மேலும், தகவல்களுக்கு 9443317439 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம். முன்னதாக ஊட்டி அறிவியல் இயக்க செயலர் சுந்தர் வரவேற்றார்.

The post அக்டோபரில் 31வது அறிவியல் ஆய்வு போட்டி appeared first on Dinakaran.

Tags : 31st Scientific Research Competition ,Ooty ,31st National Children's Science Research Competition ,Union… ,31st Science Research Competition ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...