×

மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 7.89 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வீடாக விண்ணப்ப படிவம் வழங்கப்படுகிறது-வரும் 24ம் தேதி முதல் பதிவு செய்யலாம்

திருவண்ணாமலை : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த தினமான வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தில், பயன்பெறுவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அரசால் வெளியிடப்பட்டுள்ளது.அதைத்தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், வரும் 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதி வரையும், 2ம் கட்டமாக அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

அதையொட்டி, விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடம், எந்த நாளில் பங்கேற்க வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை நேற்று முதல் வீடு வீடாக வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து, குறிப்பிட்ட நாளில் முகாம் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று, இணையவழியில் பதிவு செய்யலாம்.
செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றையும் எடுத்து வர வேண்டும்.

அதன் நகல்களை எடுத்துவர தேவையில்லை. விண்ணப்ப பதிவு முகாமில், ஆதார் எண் பதிந்து, விரல் ரேகையை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்த்து உறுதி செய்யப்படும். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1627 ரேஷன் கடைகள் உள்ளன. மேலும், 7 லட்சத்து 89 ஆயிரத்து 822 ரேஷன் கார்டுகள் உள்ளன.

எனவே, முதற்கட்டமாக நடைபெறும் முகாமில் 991 ரேஷன் கடைகளில் உள்ள 2 லட்சத்து 98 ஆயிரத்து 338 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக 636 ரேஷன் கடைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும். அதன்மூலம், 4 லட்சத்து 91 ஆயிரத்து 484 ரேஷன் கார்டுதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. எனவே, வீடுவீடாக வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை, டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளன்று முகாம் நடைபெறும் இடத்துக்கு சென்று பதிவு செய்யலாம்.

The post மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 7.89 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வீடாக விண்ணப்ப படிவம் வழங்கப்படுகிறது-வரும் 24ம் தேதி முதல் பதிவு செய்யலாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Artist Century Festival ,Anna's Birth Day ,
× RELATED (திமலை) அண்ணாமலையார் கோயிலில்...